சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியின் இயக்குனர் பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசுக்கு புகார் அனுப்பிய கல்லூரியின் நிர்வாக அலுவலர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் கல்லூரி வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, பீளமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியில் இயக்குனர் அல்லிராணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், கல்லூரி சார்பில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளுக்கான டெண்டர்கள் வழங்குவதில் தனியே லஞ்சம் பெறுவதாகவும் அதே கல்லூரியில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த தீபக் குமார் என்பவர் குற்றச்சாட்டு எழுப்பி இருந்தார்.
இது தொடர்பாக அவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், ஜவுளித்துறை அமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர், ஆளுநர் என பல்வேறு தரப்பினருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார். இதேபோல் கல்லூரியின் இயக்குனர் அல்லிராணி ஊழலில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் கையூட்டு பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதனிடையே இது குறித்த தகவல் அறிந்த கல்லூரி இயக்குனர் அல்லிராணி திடீரென நிர்வாக அலுவலர் தீபக் குமாரை பணிநீக்கம் செய்ததாக கூறி அவரை கல்லூரியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். நான் வெளியேற மாட்டேன் என கூறிய தீபக்குமார், இயக்குனர் அல்லி ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை அடுத்து கல்லூரியில் வரவு செலவுகளை கையாளும் கணக்கு அதிகாரியான டேவிட் கிருபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் சிலர் தீபக் குமாரை கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சித்ததோடு அவர் உபயோகித்து வந்த கணினியில் இருந்த ஆதாரங்களையும் அழித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நடைபெற்ற சம்பவங்களை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்த தீபக் குமார் அங்கிருந்து வெளியேறியதுடன் மீண்டும் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் மனுவை இணையதளம் மூலம் அனுப்பியுள்ளார்.
இதனிடையே நேற்று இரவு கல்லூரி வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர், இயக்குனர் அல்லிராணி கல்லூரி வளாகத்தில் கட்டப்படும் கூடுதல் கட்டிடங்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு, உணவக ஒப்பந்தம் உள்ளிட்டவற்றிற்காக தனியே லஞ்சம் பெறுவதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொறுப்பில் இருக்கும் அவர் பல கோடி ரூபாய் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், ஜவுளித்துறை அமைச்சகம் தனி விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தும் பட்சத்தில் பல உண்மைகள் வெளிவரும் எனவும் தெரிவித்தார். கல்லூரியில் ஏற்கனவே பலர் நிர்வாக அலுவலர்களாக பணியாற்றியதாகவும் இயக்குனர் அல்லிராணிக்கு சாதகமாக செயல்படவில்லை என்றால் அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியதுடன் இது தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வேன் எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து தீபக் குமார் கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த தகவலறிந்த பீளமேடு காவல் நிலைய போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதுடன் நீதிமன்றம் மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மத்திய அரசின் ஜவுளித்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்லூரியின் இயக்குனர் மீது அதே கல்லூரியில் பணியாற்றும் நிர்வாக அலுவலர் பலகோடி ரூபாய் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
