பொதுமக்களின் முகவரிகளை மிகத் துல்லியமாகக் கண்டறிய புதிய முயற்சியாக, இந்திய தபால் துறை டிஜிட்டல் பின் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது பயன்பாட்டில் உள்ள 6 இலக்க பின்கோடுகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது.

பழமையான 6 இலக்க பின்கோடுகள் தற்போது 10 இலக்க டிஜிட்டல் பின் முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு வீடு, கடை அல்லது நிறுவன முகவரியை மிகச் சிறந்த துல்லியத்துடன் (4 மீட்டர் சுற்றளவுக்குள்) கண்டறிய முடியும்.

இந்தியாவில் காலம் காலமாகப் பின்கோடு முறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், இந்தப் பின்கோடும் டிஜிட்டல் பின்கோடாக மாறியுள்ளது. இந்திய தபால் துறை இந்த நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.

இந்த டிஜிட்டல் பின் பெற, இந்திய தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, உங்கள் இருப்பிடத்தைத் தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் இருப்பிடம் குறித்த டிஜிட்டல் குறியீடு உருவாகும்.

ஆம்புலன்ஸ், போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படைகள் உள்ளிட்ட அவசர சேவைகள், இந்தப் பின் மூலம்  உங்கள் இருப்பிடத்தை விரைவில் அடைய முடியும். கடிதங்கள், பார்சல்கள் மற்றும் ஆன்லைன் பொருட்கள் துல்லியமாக நேரடி முகவரிக்கு வந்து சேர உதவுகிறது. முறையான முகவரி இல்லாத இடங்களிலும் இந்த டிஜிட்டல் பின் மிகப் பயனுள்ளதாக அமைகிறது.

ஐஐடி ஹைதராபாத், இஸ்ரோ, மற்றும் என்ஆர்ஏசி  போன்ற முக்கிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த டிஜிட்டல் பின்கோடு உருவாக்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு அடிப்படையில் செயல்படுவதால், அதிநவீனமான முகவரி தேடல் முறையாக விளங்குகிறது.

இதனை செல்போனில் ஆப் லைனில் உபயோகப்படுத்த முடியும். முறையான முகவரிகள் இல்லாத பகுதிகளில் கூடக் காவல்துறை, ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு வீரர்கள், தனிநபர் சேவை ஆகியவற்றை துல்லியமாகக் கண்டறிய முடியும். ஒவ்வொரு டிஜிட்டல் பின்னும் தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காமல், வெறும் புவிசார் தகவல்களைக் கொண்டே செயல்படுகிறது. எனவே, தனிநபர் தகவல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

முந்தைய காலங்களில் கடிதம் அனுப்பினால் அதில் இருப்பிடத்தின் 6 இலக்க பின்கோடை குறிப்பிட்டு அனுப்புவர். அந்தப் பின்கோட்டின்படி, கடிதம் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றடையும். அதிலும் வீடு இருக்கும் இடத்தைத் துல்லியமாக அறிய முடியாது.

தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் பின்கோட்டின் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும். இதனால், இந்த நடைமுறை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.