லங்கா கார்னரிலிருந்து உக்கடம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப் பாதையை உருவாக்கும் வகையில் வாலாங்குளம் குளக்கரை வழியே புதிய சாலையை அமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

முன்னதாக வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதசாரிகள் நடக்கும் பாதையாக உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது கரையோரப் பாதையை ஒரு வழிப் பாதையாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

லங்கா கார்னர் ரயில்வே பாலத்திற்கு அருகிலுள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு எதிரே தொடங்கும் இந்த பாதை சுமார் இரண்டு கிலோமீட்டர்களை உள்ளடக்கியது. ஏரியின் ஓரமாகச் சென்று, உக்கடம்-சுங்கம் பைபாஸ் அருகிலுள்ள வின்சென்ட் சாலை சந்திப்பில் முடிவடைகிறது.

புதிய சாலை திட்டம் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு மற்றும் நகர போக்குவரத்து காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், தார்ச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இதனால் வின்சென்ட் சாலை, டவுன் ஹால் சந்திப்பில் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறுகையில்: ஸ்மார்ட் சிட்டி பணிகளின் போது இப்பாதை உருவாக்கப்பட்டது. இது வாலாங்குளத்திற்கு நீர் வழங்கும் உள்ளூர் கழிவுநீர் கால்வாய்க்கு அருகில் உள்ளது. 11 வணிக கட்டமைப்புகள் உட்பட, கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் இந்த வழியே அமைந்துள்ள வீடுகள் வேறு இடத்திற்கு மாற்றப்படும். மாற்று இடத்தில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். இதனால் மாநகராட்சி சாலையின் 10 மீட்டர் அகலத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியும். புதிய சாலை கட்டி முடிக்கப்பட்டதும், லங்கா கார்னரிலிருந்து உக்கடம் வரை ஒருவழிப் போக்குவரத்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.