யானைகளைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? யானைகள் அழிந்தால் என்னவாகும்? என்பது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் “ஓசை” அமைப்பின் தலைவர் காளிதாசன் தி கோவை மெயிலிடம் விவரிக்கிறார்.
தமிழ் இலக்கியங்கள் முழுவதிலும் யானைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் பல்வேறு இயல்புகள், வாழ்விடங்கள், மனிதனுக்கும் யானைக்குமான உறவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழில் யானைக்கு 80 வகையான பெயர்கள் உள்ளன. யானை கடலில் இருந்து பரிணமித்து வந்துள்ளதாகவும், 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருக்கலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
காடுகளையும், அதன் உயிர்சூழலைக் காப்பாற்றுவதிலும் யானை பெரும்பங்கு வகிக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஆஸ்திரேலியா காடுகளில் யானைகள் கிடையாது. ஆசியா, ஆப்பிரிக்கா காடுகளில் தான் யானை உள்ளது.
யானைக்கு தினமும் 200 முதல் 250 கிலோ உணவு, 100 – 150 லிட்டர் தண்ணீர் தேவை. காட்டு யானைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் புற்களைத்தான் சாப்பிடும். பெரிய உடம்பாக இருப்பதால் அதிக உணவு தேவைப்படுகிறது. அதனால் 15 முதல் 16 மணி நேரம் வரை சாப்பிடும்.
யானைக் கூட்டத்திற்கு ஒரே இடத்தில் உணவு கிடைக்காது. உணவைத் தேடி அவை நகரும். யானைக் கூட்டம் சராசரியாக 500 சதுர கிலோ மீட்டர் தூரத்தை ஒரு ஆண்டிற்கான வாழ்விடமாகப் பயன்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. சராசரியாக 60 வயது வரை வாழும் உயிரினமாகும். வயதான பெண் யானையின் தலைமையில் யானைகள் கூட்டமாகக் கூடி வாழும். மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் இயல்புடையவை.
யானை தான் செல்லும் பாதைகளை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளும். அதிக நினைவாற்றல் கொண்டவை. மற்ற உயிர்கள் மீதும் பாசம் கொண்டவை.
யானைக்கு மதம் பிடிப்பது என்பது நோயோ அல்லது அதீதமான குணமோ இல்லை. அது இயல்பான, ஆரோக்கியமான ஆண் யானையின் வெளிப்பாடு தான். ஆண் யானைக்கு ஆண்டுதோறும் மதக்காலம் வரும். மதக்காலம் என்பது இணை சேரும் காலம். நல்ல ஆரோக்கியமான ஆண் யானைக்கு மதம் சுரக்கும்போது அது இணை சேர வேண்டும். மத காலம் முடிந்த பின்பு இயல்பு நிலைக்கு வரும்.
யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு 20 ஆண்டுகளாக குறைதல் என்பது ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு காலத்தில் தோராயமாக 1 லட்சம் யானைகள் இருந்திருக்கலாம். கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 27,000 – 30,000 யானைகள் காடுகளில் உண்டு.
இந்தியாவில் ஆண் யானைக்கு தான் தந்தம் உண்டு. ஆனால் ஆப்பிரிக்காவில் ஆண், பெண் இரண்டுக்கும் தந்தம் இருக்கும். யானையின் வளர்ந்த முன்வெட்டு பற்கள் தான் தந்தமாகப் பரிணமிக்கிறது. தந்தம் அற்ற ஆண் யானைகள் ‘மக்னா யானை’ எனப்படும். இலங்கையில் இருக்கும் பெரும்பாலான ஆண் யானைகளுக்கு தந்தம் இல்லை.
யானைகளை அழித்ததில் தந்த வேட்டைக்கு பெரும்பங்கு உண்டு. தந்த வேட்டையினால் யானைகளில் ஆண், பெண் விகிதங்கள் குறைந்துவிடும். ஆனால் இன்றைக்கு தந்த வேட்டை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கணிசமாக ஆண் யானையின் எண்ணிக்கை கூடியுள்ளது.
யானைகளுக்கு தற்போது சிக்கலாக உள்ளது வாழ்விடம் தான். பெரிய விலங்கு என்பதால் அதிக வாழ்விடம் தேவைப்படுகிறது. யானையின் வாழ்விடங்கள் அனைத்தும் தற்போது சுருங்கி விட்டன. காட்டில் இருந்து யானை கிராமத்திற்கும் வருவதால் மக்கள், விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். யானை இவ்வாறு வெளியேறக் காரணம், காட்டின் பரப்பு குறைந்தது தான். யானைகளின் வாழ்விடம் சுருங்கினால் உணவு, தண்ணீர் குறைந்துவிடும். இதனால் பிரச்சனை அதிகரிக்கும். யானைகளின் வாழ்விடம், வலசைப் பாதைகளைக் காப்பாற்றுவது முக்கியம்.
யானை சாணத்தின் வழியாக ஏறக்குறைய 300 வகையான விதைகள் பரப்பப்படுவதாக ஆப்பிரிக்கா ஆய்வு கூறுகிறது. யானை சாணத்தின் மூலம் கிடைக்கும் உரங்கள் காட்டின் வளத்தைப் பாதுகாக்கின்றன. யானைகளால் காடுகளுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. காடுகளை உருவாக்கியதில் இத்தனை நூற்றாண்டுகளில் யானைகளின் பங்கு அளப்பரியது. மற்ற வன விலங்குகளின் உணவு தேவையையும் பூர்த்தி செய்து, பல்லுயிர் வளத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது. காடுகள் இன்றைக்கு தரம் இழந்துள்ளன. இயற்கையின் பெரும் வடிவம் காடு. காட்டின் பேருயிர் தான் யானை.
