ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் “விகான்சா–2026” பல்திறன் போட்டி விழா வெள்ளி தொடங்கியது. சனிக்கிழமையும் இப்போட்டி நடைபெறும்.
இதில் மொத்தம் 255 மாணவர்கள் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத போட்டிகளிலும், 475 மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும், 35 அணிகள் 24 மணி நேரம் நடைபெறும் “11:11 ஹேக்கத்தான்” போட்டியில் பங்கேற்று, தங்களின் புதுமை, படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை ஏற்று, மாணவர்கள் நவீன தொழில்நுட்பத் துறையில் சிறந்த பயிற்சியைப் பெற வேண்டும் என்றும், கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பொறியியல் கல்லூரியின் முதன்மையர் ஆரிஸ் இக்னாசியோ கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்கள் புதுமையான தொலைநோக்கு சிந்தனையுடன் கல்வி கற்று புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்க வேண்டும் என்றும், அதுவே கல்வியின் உண்மையான பயன் என்றும் வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவரும் பொறியியல் வல்லுநருமான சுமதி பொன்ராமர் கலந்துகொண்டு, தனது உரையில், இந்தக் கல்லூரியில் தான் நிறைய கற்றுக் கொண்டதாகவும், மாணவர்களும் தங்கள் அறிவை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் கற்ற கல்வியை அனுபவத்துடன் இணைத்து திறமையை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும், கல்லூரியின் முன்னாள் மாணவரும் பொறியியல் துறை வல்லுநருமான ரவிசங்கர் கலந்துகொண்டு, தனது உரையில், மாணவர்கள் கற்றுக்கொள்வதைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து கற்றுக்கொள்வதே ஒருவரை வடிவமைத்து அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றும் அறிவுரை வழங்கினார்.
விழாவில் கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
