கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், பல்வேறு துறைகள் தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் குரங்குகள் சர்வ சாதாரணமாக உலா வருவது பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இந்த குரங்குகள் பொதுமக்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படுத்தாமல் அமைதியாக சுற்றித்திரிந்தாலும், அவை வனவிலங்குகள் என்பதால் அவற்றின் இயல்பான குணங்களை கருத்தில் கொண்டு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு வழங்கவோ, அவற்றை அருகில் சென்று துன்புறுத்தவோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குரங்குகளை சீண்டுவது அல்லது அவற்றுக்கு உணவு வழங்குவதன் மூலம் அவை மனிதர்களை நெருங்கும் பழக்கத்திற்கு ஆளாகலாம். இதனால் எதிர்பாராத சூழலில் பொதுமக்களை தாக்கும் அபாயமும் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் குரங்குகளிடம் உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், அவற்றை நெருங்காமல் இருப்பதுடன் உணவு வழங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பாதுகாப்பான முறையில் பிடித்து, அவற்றை வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
