சத்குருவால் வழங்கப்படும் மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானம் வெறும் 7 நிமிடங்களில் செய்யக்கூடியது என்பதால் இதை சாதாரணமாக நினைக்க வேண்டாம். இது சத்குருவால் நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான விஷயம் என நடிகர் சந்தானம் கூறினார்.
ஈஷா அறக்கட்டளை சார்பில் ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியான நிகழ்ச்சி, சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி கன்வென்ஷன் சென்டரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம், நடிகை லிஸ்ஸி லக்ஷ்மி, நடிகர் கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம், சத்குரு தமிழ்நாட்டில், கோயம்புத்தூரில் இருந்தாலும், அவர் அளிக்கும் பயிற்சிகள் மற்றும் தியானங்களை சென்னையில் இருக்கும் நாம் எடுத்து அனுபவம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுவதாக நான் கருதுகிறேன்.
நான் கடந்த 10 ஆண்டுகளாக சத்குருவின் ஷாம்பவி, சக்தி சலனக்ரியா, ஹடயோகா, சம்யமா உட்பட அத்தனைப் பயிற்சிகளையும் முடித்துள்ளேன். படப்பிடிப்பில் இருக்கும்போது, ஷாம்பவி அல்லது சக்தி சலனக்ரியா போன்ற பயிற்சிகளை செய்ய 2 மணிநேரம் அல்லது குறைந்தது 21 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும் என்பதால், சில சமயங்களில் என்னால் அவற்றை தவறாமல் செய்ய முடிவதில்லை.
ஆனால், இந்த ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியானப் பயிற்சியைச் செய்ய வெறும் 7 நிமிடங்களே போதுமானது. இதை நாம் எங்கு சென்றாலும் காதில் கேட்டு செய்ய முடியும். படப்பிடிப்பு இடைவெளிகளில் 5 நிமிடங்கள் கிடைத்தால்கூட, இந்த பயிற்சியை செய்யலாம்.
வெறும் 7 நிமிடத்திற்கு ஒரு தியானத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம், இந்த தியானம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தச் செயலி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இதை ஏற்கனவே செய்பவர்களுக்கு இதன் மகிமை தெரிந்திருக்கும். செய்யாதவர்கள் தயவுசெய்து இனிமேலாவது இதைச் செய்யுங்கள். சத்குருவால் நமக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான விஷயம் இது எனக் கூறினார்.
