மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

திருநெல்வேலியில் இருந்து ஞாயிறு இரவு 7 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் (எண் 06030) சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றுசேரும்.

அதேபோல் மறுமர்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள் இரவு, 7:45 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி (எண் 06029) சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் சேரன் மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் பயனுள்ளதாக உள்ளது. ஏப்ரல் 2022 முதல் தற்போது வரை இந்த சிறப்பு ரயில் பயணிகளின் வசதிக்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஜூன் மாதத்துடன் ரயில் சேவை நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த வகையில், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 31 வரையிலும், மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜூலை 7 முதல் செப்டம்பர் 1 வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.