பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பாக கொங்கு தொழில்முனைவோர் அமைப்பைச் சார்ந்த 50 தொழில் முனைவோர்களுக்கு வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வழிமுறைகள் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
கெம்பா நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஒவ்வொரு நிறுவனமும் தற்கால நடைமுறைக்கேற்ப வளர்ச்சியை நோக்கி செல்வதற்கான வழிமுறைகள் குறித்து பல்வேறு நடைமுறை உதாரணங்களோடு பேசினார்.
என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.வி. சுப்பிரமணியன் பேசுகையில்: டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் “மிலா” என்று அழைக்கப்படும் இளம் தொழில் முனைவோர்களுக்கான புத்தாக்க அமைப்பு, தமிழக அரசின் ஸ்டார்ட்டப் டிஎன் அமைப்பின் நிதி உதவியோடு செயல்பட்டு வருகிறது.

தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு நிறுவனத்தை பதிவுசெய்வது முதல், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வரை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பகுதியின் இளம் தொழில் முனைவோர்களுக்கு அனைத்து வழிகாட்டும் உதவிகளையும் செய்துதர தயாராக இருப்பதாக பேசினார்.
நிகழ்வில் முதன்மையர் விஜயகுமார், என்.ஐ.ஏ நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன், தொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ்குமார், வளர்ச்சி மேலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
