கோவையில் உள்ள மருதமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று தரிசனம் செய்ய, லிப்ட் வசதி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ரூ.5.20 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

மருதமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏரளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் மலை மீதுள்ள கோவிலுக்குச் செல்ல மலைப் பாதை, படிக்கட்டுப் பாதைகள் உள்ளன. கோவிலுக்கு 150 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டியுள்ளதால், வயதானோருக்கு சிரமம் உள்ளது.

இந்நிலையில், ராஜகோபுரம் படிக்கட்டு அருகே வாகனம் நிறுத்தும் இடத்தில் இரு லிப்ட்கள் அமைக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு லிப்ட்டிலும் ஒரே நேரத்தில் 20 பேர் செய்யலாம். லிப்ட் 12 மீட்டர் உயரம் வரை செல்லும். பின்னர், 40 மீட்டர் தொலைவு நடந்து வந்து, இன்னொரு லிப்ட்டின் மூலம் 8 மீட்டர் மேலே சென்று கோவிலை அடைய முடியும்.

மருதமலை கோவிலில் இரு பிரிவுகளாக மேம்பாட்டுப் பணிகள், லிப்ட் அமைக்கும் பணிகள் நடகின்றன. முதல் கட்ட திட்டத்தில் ரூ.6 கோடி செலவில் அன்னதானக் கூடம், பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் 10 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

2ம் கட்ட திட்ட பணிகளில் ஆதி மூலஸ்தானம் செல்லும் பழைய படிக்கட்டுப் பாதைகள் சீரமைத்தல், 11 இளைப்பாறு மண்டபங்கள் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

2ம் கட்ட லிப்ட் திட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. பாறையைக் குடைந்து சில பணிகள் செய்ய வேண்டியுள்ளதால், 15 சதவீதம் பணிகள் இதில் மீதமுள்ளன. லிப்ட் அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.