தமிழக அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டம், பதுவம்பள்ளி கிராமத்தில் 10-வது கிராம புத்தொழில் சமூகத்தை தொடங்கி வைத்தது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரியின் – இன்குபேஷன் ஹப் மற்றும் ஸ்ரீ ஷாக்தி சுற்றுச்சூழல் மையம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இக்கிராம புத்தொழில் சமூக முயற்சியை துவங்கியுள்ளது.
இத்திட்டம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறப்பு திறனாளிகள் ஆகியோருக்கு புதுமை வளர்ச்சி, யோசனைகளின் வடிவமைப்பு, முன்மாதிரி தயாரிப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆரம்ப கட்ட தொழில் முனைவிற்கு ஆதரவு வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
நிகழ்வில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பாகத் துணைத் தலைவர் மற்றும் தலைமைப் பணியாளர் தசிவகுமார் பழனிசாமி, கோயம்புத்தூர் மாவட்ட திட்டத் தலைவர் காயத்ரி, திட்ட இணைப்பாளர் ராஜசேகர் சிவசாமி ஆகியோர் கலந்து கொண்டு, “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டத்தின் நோக்கம், செயல்முறை மற்றும் தொழில் முனைவுகளுக்கான வாய்ப்புகளை விளக்கினர்.
