கோவைப்புதூர் பகுதியில் டிப் டாப் உடையுடன் மங்கி குல்லா அணிந்திருக்கும் கொள்ளையன், வீடுகளில் நோட்டமிட்டு பணம், நகை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டவுசர் கொள்ளையர்கள் மாநகரில் பல்வேறு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். தனியார் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளில் நோட்டமிட்டு கொள்ளை அடித்தனர். டவுசர் கொள்ளையர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு உடல் முழுவதும் எண்ணையை தடவிக் கொண்டு இரவில் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், வடமாநில டவுசர் கொள்ளையர்களைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கோவைப்புதூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று சாமுவேல் என்பவரின் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.34,000 பணம் என அப்பகுதியில் உள்ள ஐந்து வீடுகளில் கொள்ளை அடித்துள்ளனர். இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆய்வு நடத்தி சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றினர். அதில் டிப் டாப் உடையில் மங்கி குல்லா அணிந்து ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு மர்ம நபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
