கே.பி.ஆர் மில் பெண்கள் பணியாளர் கல்வி பிரிவின் 12வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நிறுவனத்தின் தெக்கலூர் வளாகத்தில் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டம் பெற்றனர்.

கே.பி.ஆர் மில் லிமிடெட்டில் பணிபுரியும் பெண் பணியாளர்கள், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்  மூலம் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை படித்து வருகின்றனர். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் 40,000க்கும் மேற்பட்ட பெண்கள் திறந்தநிலை கல்வி முறையில் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.

அந்தவகையில் 12வது பட்டமளிப்பு விழாவிற்கு கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி. ராமசாமி தலைமை தாங்கினார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

மரபின் மைந்தன் முத்தையா மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனிதவள துணைத் தலைவர் சுஜித் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கேபிஆர் மில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.

கல்வி பிரிவின் முதல்வர் சரவணபாண்டி ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்து பேசுகையில்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 7 இளங்கலை மற்றும் 7 முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்காக தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் உடனும் இணைந்து கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போது 5,500 பெண்கள் இந்த கல்வித் திட்டத்தின் மூலம் படித்து வருகின்றனர். இந்த ஆண்டில் 618 பேர் பட்டம் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி மற்றும் சோஹோ நிறுவனத்தின் மூலம் மென்பொருள் பயிற்சி போன்ற சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு 40 நர்சிங் பட்டதாரிகள் மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். பட்டம் பெற்ற மற்ற பணியாளர்களை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புக்கு ஏற்படுத்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 200 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினர் நீதிபதி ஸ்ரீமதி தனது பட்டமளிப்பு உரையில் பேசியதாவது: 145 கோடி மக்கள் தொகையுடன் இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் இளைஞர்கள் என்றும், குறிப்பாக 20 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவர்கள் என்றும் கூறினார். இந்த வயதுக்குழுவில் மட்டும் 18 கோடி பெண்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பல முக்கிய பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் 806 மாவட்டங்களில் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வதில் சிறப்பு பெற்றால் இறக்குமதியை குறைத்து அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றார். இதனை நோக்கமாகக் கொண்டு இளம் பட்டதாரிகள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மரபின் மைந்தன் முத்தையா வாழ்த்துரையில், கல்வியின் சக்தியுடன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும் என்று பட்டதாரிகளை ஊக்குவித்தார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சுஜித் குமார் பேசியதாவது: கல்வி ஒரு தலைமுறையின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது. ஒரு தலைமுறை கல்வியைத் தேர்வு செய்தால் அது தங்களது வாழ்க்கையையும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் மாற்றும்.

இந்தியாவின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் தற்போது 27% மட்டுமே என்றும், அதாவது 100 பேரில் 27 பேர் மட்டுமே கல்லூரியில் சேருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாழ்க்கையில் பெரிய சாதனைகளை அடைய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளை முன்னிட்டு ஒரு தெளிவான நோக்கமும் திட்டமும் கொண்டு செயல்பட வேண்டும். அப்படி நீண்டகால இலக்குகளை அமைத்தால் தனிப்பட்ட வெற்றியுடன் சமூக மாற்றத்திற்கும் கல்வி வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.