உலகம் முழுவதும் இன்ஜினியர்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது என கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

துணைத்தலைவர் இந்து முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசுகையில்: பொறியியல் துறை இல்லாமல் உலகில் இயக்கம் இல்லை. புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள பொறியியல் அடிப்படை அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட இன்டெல் கார்ப்பரேசன் நிறுவன தொழில்நுட்ப அதிகாரி ஸ்ரீராம் வாசுதேவன் பேசுகையில்: மாணவர்கள் புத்தகப் படிப்புடன் நின்றுவிடாமல் தங்களது துறைகளில் நடைபெறும் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்கும் சிறந்த இன்ஜினீயர்களாக உருவாக வேண்டும் எனப் பேசினார்.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரமேஷ், துணை முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

100% மாணவர் சேர்க்கை

விழாவில் கே.ஐ.டி நிறுவனத் தலைவர் பொங்கலூர் பழனிசாமி பேசுகையில்: அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100% மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

விஜயலட்சுமி பழனிசாமி கல்வி அறக்கட்டளையின் மூலமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்லூரி ஆண்டு கட்டணம் மற்றும் விடுதி கட்டணங்களில் வழங்கப்படும் சலுகைகள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார்.

மாணவர்கள் விஞ்ஞானிகளாக உயர வேண்டும்

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மாணவர்கள் மத்தியில் பேசுகையில்: இன்ஜினியரிங் கற்கும் மாணவர்கள் பொறுப்புடன் கல்வியினை ஆர்வமாகக் கற்க வேண்டும். உலகம் முழுவதும் இன்ஜினியர்களுக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. மாணவர்கள் தங்களது துறையில் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்றார்.