சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாய் ருசி உணவகம், கர்நாடகாவின் பாரம்பரிய ‘திண்டி’ உணவு வகைகளை வழங்கி வரும் தனது பயணத்தில் 1,000 நாட்களை நிறைவு செய்துள்ளது.
நிறுவனர் அசோக் பாட்டிஜா, சுமார் மூன்று தசாப்தங்கள் நுகர்வோர் மின்னணு பொருட்கள் துறையில் பணியாற்றியவர். பெங்களூரின் பாரம்பரிய காலை உணவு மற்றும் சிற்றுண்டி வகைகள் மீதான நீண்டகால ஈர்ப்பின் காரணமாக ஸ்ரீ சாய் ருசி உருவானது. அவரது மனைவி காஞ்சன் பாட்டிஜாவின் குடும்பத்தினரும் பெங்களூரில் சுமார் பத்து ஆண்டுகள் உள்ளூர் கேன்டீன் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
பெங்களூரு மசாலா தோசையின் மாவு தயாரிப்பு முதல் தோசை ஊற்றும் முறை, ரவா இட்லியை சரியான நேரத்தில் ஆவியில் வேகவைத்தல், சாம்பாரின் மணம் மற்றும் சுவை என ஒவ்வொரு அம்சத்திலும் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறார் அசோக் பாட்டிஜா.
ரவா இட்லி, தாவணகெரே பெண்ணே தோசை, மைசூர் மசாலா தோசை, நீர் தோசை மற்றும் பனீர் சப்ஜியுடன் புல்கா உள்ளிட்ட உணவு வகைகள் ஸ்ரீ சாய் ருசியின் பிரபலமான உணவுகளாக உள்ளன. மேலும், ஸ்ரீ சாய் ருசி தனது சொந்த தயாரிப்பாக ரவா இட்லி மிக்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
