ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இம்மாதத்தில் 13 தேசிய விருதுகள் பெற்றுள்ளன.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 8 மாவட்டங்களில் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, ‘ஈஷா அவுட்ரீச்’ அமைப்பு வழிகாட்டி, ஆதரவு அளித்து வருகிறது. இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் டில்லியில் கடந்த 12ம் தேதி உற்பத்தியாளர் நிறுவனங்களின் உச்சி மாநாடு மற்றும் விருது விழா நடந்தது.

இதில் ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் காடையாம்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு, மாடுகளின் இனப்பெருக்க ஆரோக்கியம் மேம்பட, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மாட்டு தீவனத்தை உருவாக்கியதற்காக, தேசியளவில் விருது வழங்கப்பட்டது. புளியை சிறந்த முறையில் சுத்திகரித்து பேக்கேஜ் செய்ததற்காக, கர்நாடக மாநிலம், நெகில்லா சித்தா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டது.

கடந்த 9ம் தேதி டில்லியில் நடந்த ‘மில்லியனர் பார்மர் ஆப் இந்தியா’ விருதுகள் வழங்கும் விழாவில், 11 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பல தேசிய அங்கீகாரங்களைப் பெற்றன. இதன் வாயிலாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், இந்த மாதத்தில் மட்டும், 13 தேசிய விருதுகளை பெற்று அசத்தியுள்ளன.

இதுகுறித்து ஈஷா அவுட்ரீச்சின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான திட்ட இயக்குநர் வெங்கட் ராஜா கூறுகையில், உழவர் உற்பதியாளர் நிறுவனங்கள், இதுவரை 23 தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்றுள்ளன. இந்த விருதுகள் வாயிலாக கிடைத்திருக்கும் அங்கீகாரம் ஒரு முக்கியமான மைல்கல் எனக் கூறினார்.