ஈஷா அறக்கட்டளையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள், தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வரும் ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகின்றன.
இந்தாண்டு 10 மாநிலங்களைச் சேர்ந்த 40,000 கிராமங்களில் இருந்து 80,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளுக்கு மொத்தம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
“கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ‘ஈஷா கிராமோத்சவம்’ தொடங்கப்பட்டது”.
தமிழ்நாட்டில்…
தமிழ்நாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் அளவிலானப் போட்டிகள் ஆகஸ்ட் 1 முதல் நடைபெற உள்ளன. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளன. மேலும் இரண்டாம் கட்ட மண்டல அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 3வது மற்றும் 4வது வார இறுதி நாட்களில் நடைபெறும்.
இந்த தொடர் கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய நிலைகளில் நடைபெறும். பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும்.
பரிசுத்தொகை
ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கு வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கு த்ரோபால் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு இதில் பங்கேற்க அனுமதி கிடையாது.
ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் வழங்கப்படும்.
இதுமட்டுமின்றி, கிளஸ்டர், டிவிஷனல் போட்டிகளிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
வட மாநிலங்களில்
கடந்தாண்டு வரை தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெற்ற வந்த ஈஷா கிராமோத்சவம் இந்தாண்டு வட மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களோடு இணைந்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடத்தப்படுகின்றன.
இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,000 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பெண்கள் உட்பட 80,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில், ஈஷா கிராமோத்சவம் தொடங்கியதில் இருந்து இன்று வரை, சுமார் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2.60 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
கிராமோத்சவ திருவிழாவில் வள்ளி கும்மியாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளைக் கண்டு ரசிக்கலாம். அதோடு கோ-கோ, கிட்டிப்புள், கபடி போன்ற கிராமத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம்.
ஈஷா கிராமோத்சவம் 2026-க்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தகுதியுள்ள கிராமப்புற வீரர்கள் ishagramotsavam.sadhguru.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, 83000 30999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
