ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியில் ‘நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் – ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ எனும் தலைப்பில் விவசாய கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

சத்குரு முன்னிலையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் கலந்துகொண்டார்

கருத்தரங்கில் சத்குரு பேசுகையில், விவசாய நிலங்களில் மரங்களும், விலங்குகளும் இல்லாமல் மண்ணைப் பாதுகாப்பது என்பது சாத்தியமில்லை. மரம் என்பது விவசாயிகளுக்கான காப்பீடு, இதனால் அவர்களின் பொருளாதார அமைப்பு பாதுகாக்கப்படும்.

ஒரு விவசாயி தனது நிலத்தில் எதை வளர்த்தாலும் அது அவருக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். எட்டு அடிக்குக் கீழே உள்ள மண் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்ற பிரிட்டிஷ் காலத்து சட்டம் மாற்றப்பட வேண்டும். நிலத்தில் தங்கம் கிடைத்தால் கூட அரசு வரி விதிக்கலாமே தவிர, அதை எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஒரு விவசாயி தனது நிலத்தில் வளர்க்கும் மரங்களை வெட்டுவதற்கும் விற்பனை செய்வதற்கும் எவரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. இதனை அரசு கொள்கையாக மாற்ற வேண்டும். இதனை வேளாண்துறை அமைச்சர் முதல் அனைத்து தலைவர்களிடமும் நான் கோரிக்கையாக வைக்கிறேன்.  தயவுசெய்து, இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக, நாம் இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனப் பேசினார்.

ISHA 2 2

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் பேசுகையில்: சத்குரு வழிகாட்டுதலின்படி காவிரியின் வடிநிலப்பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுப்பதன் மூலம் மண்ணின் வளத்தைப் பாதுகாப்பதோடு, விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்பதை நான் நேரடியாகக் கண்டு வியந்துள்ளேன். ஆகையால் அவரின் வழிகாட்டுதலில் மரம் சார்ந்த விவசாயத்தை இந்திய அரசாங்கத்தின் ஒரு முக்கியக் கொள்கையாகவே முன்னெடுத்துச் செல்ல நான் உறுதிபூண்டுள்ளேன்எனக் கூறினார்.

கருத்தரங்கில் ஐந்து தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த வேளாண விஞ்ஞானிகள் மற்றும் நான்கு மாநில முன்னோடி விவசாயிகள் பங்கேற்று உயர்வருமானம் தரும் மரப்பயிர் தொழில்நுட்பங்கள் மற்றும் வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.