கள்ளிப்பாலில் குளித்து,
எள்ளுருண்டையை எட்டி உதைத்து,
பப்பாளியுடன் பலமாய் போராடி
உயிர் பிழைத்து வெளிவந்தால் —
அது பெண் குழந்தை!
“பெண்ணா… பெண்ணா… போச்சு!”
என்று ஏளனமாக பேசிய சமுதாயம்
இன்று அதே பெண்ணின்
சாதனைகளைப் பார்த்து வியக்கிறது.
அடுப்பங்கரையில் அழுதவள்,
இன்று அண்ட வெளியில் பறக்கிறாள்.
பள்ளிக்கு செல்லாதவள்,
இன்று பல பள்ளிகளை நடத்துகிறாள்.
தீயைக் கண்டு அஞ்சியவள்,
இன்று தீயணைப்பு வீராங்கனையாக நிற்கிறாள்.
வாசற்படியைத் தாண்டாதவள்,
இன்று வானூர்தியை இயக்குகிறாள்.
வாயைத் திறக்க அனுமதிக்கப்படாதவள்,
இன்று வழக்கறிஞராக வாதாடுகிறாள்.
நீதி கேட்டு அழுதவள்,
இன்று நீதிபதியாக நீதி வழங்குகிறாள்.
அநீதியைக் கண்டு அடங்கியவள்,
இன்று அதிகாரியாக வலம் வருகிறாள்.
கள்வர்களைக் கண்டு பயந்தவள்,
இன்று காவல் அதிகாரியாக விரட்டுகிறாள்.
மண்ணைப் பார்த்து நடந்தவள்,
இன்று மருத்துவராக உயிர்களை காப்பாற்றுகிறாள்.
இரவில் வெளியே செல்லாதவள்,
இன்று இராணுவ அதிகாரியாக எல்லையில் நிற்கிறாள்.
தடைகளைத் தகர்த்து,
சரித்திரம் படைத்து,
ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு பெண்ணும்
இன்று சாதனைப் பெண்ணாக திகழ்கிறாள்.
பெண் என்பதில் பெருமை கொள்வோம்!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
— சீதா சரவணன்
ஒருங்கிணைப்பாளர்/ தமிழாசிரியை
ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் ஸ்கூல், கோவை.
