தொழில்நகரம் என்றழைக்கப்படும் கோவையில் ‘ஸ்டார்ட்-அப்’ அளவில் துவங்கி, பெரிய விரிவாக்கம் செய்யக்கூடிய நிலைக்கு முன்னேறிய நிறுவனங்கள் ஏராளம்.

ஏன் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற தெளிவும், மக்களின் பிரச்சனை என்ன?  தேவை என்ன? என்பதை அறிந்துகொண்டு அதற்கு தீர்வு வழங்க சரியான திட்டத்துடனும், ‘ரிஸ்க்’ எடுக்கும் துணிச்சலுடனும் துவங்கும் நிறுவனங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதற்கு முன்னுதாரணமாக கோவை மாவட்டத்தில் பல நிறுவனங்கள் விளங்குகின்றன.

இப்படிப்பட்ட நிறுவனங்கள் பெண்களால் துவங்கப்பட்டு கோவையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பை பெற்றுவருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு இவற்றில் ஒன்றை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Bliss 4

ரூ.
20,000த்தை வைத்து ரூ.6 கோடி

கல்லூரியில் படிக்கும் போதே நல்ல சம்பளம் தரும் வேலையில் சேர்ந்துவிடவேண்டும் என்பதே பல மாணவர்களின் கனவாகவும், அவர்களின் பெற்றோர்களின் விருப்பமாகவும் இருக்கும்.

2017ல் கோவையை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் படிப்பை நிறைவு செய்ய இருந்த நண்பர்கள் நிவேதா, கவுதம் ஆகியோருக்கு அப்படி ஒரு வேலைவாய்ப்பு கிடைத்தபோதும், அதை ஓரமாக வைத்துவிட்டு, தாங்கள் திட்டமிட்டு வந்த ஒரு நிறுவனத்தை துவங்க வேண்டும் என தங்கள் பெற்றோரிடம் கூறினர்.

Bliss 5

பெண்களுக்கான சானிட்டரி பேட் தயாரிக்கும் தொழிலை துவங்க அவர்கள் விரும்பினர். ஆர்கானிக் வகை சானிட்டரி பேட் உருவாக்க ஒரு தெளிவான திட்டத்தை வைத்திருந்தனர்.

“இது தவறான முடிவு. ‘சானிட்டரி பேட்’-டுகளுக்காக இப்படி ஒரு முயற்சி தேவையா? முதலீடு எப்படி கிடைக்கும்?” இப்படி பல கேள்விகள் அவர்களுக்கு முன்பு, குடும்பத்தினரால் வைக்கப்பட்டது.

2018ல் வெறும் ரூ.20,000த்தை வைத்து, 1 பி.ஹெச்.கே. அளவு வளாகத்தில், 2 பேரால் துவங்கப்பட்ட ‘க்ரீன் டிலைட் இன்னோவேசன்ஸ்’ நிறுவனம் இன்று ரூ.6 கோடி மதிப்பிலான நிறுவனமாக, 10,000 சதுரடி வளாகத்தில் இருந்து பெண்களுக்கான சுகாதார பொருட்களை தயாரித்து, இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் சேர்த்துவருகிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? இந்த நிலையை 8 ஆண்டுகளுக்குள் எட்டிக்காட்டினர் இந்த இரு நண்பர்கள்.

சந்தையில் ஏகப்பட்ட சானிட்டரி பேட் நிறுவனங்கள் இருக்கும்போது, இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ‘ப்லிஸ் நேச்சுரல்’ ஆர்கானிக் சானிட்டரி பேட் உருவாக இரண்டு காரணங்கள் உண்டு.

Bliss 3

1) பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி பேட்கள் மூலம் ஏதாவது அசௌகரியம் இருக்கிறதா என நிவேதா, கவுதம் ஆய்வு செய்த போது, அந்த ஆய்வில் பங்கேற்ற பெரும்பான்மையானோர் ஆம்என்றே கூறியிருந்தனர்.

2) புளிச்சக்கீரை என சொல்லக்கூடிய கீரையை சமையலுக்கு பயன்படுத்திய பின்னர், அதன் தண்டு பகுதிகள் குப்பைக்கு செல்கிறது. இதை வைத்து ஏதாவது பயனுள்ள பொருட்களை செய்யமுடியுமா என்ற பார்க்க வந்த கோரிக்கை.

புளிச்சகீரையின் நாரில் ஈரப்பதத்தை அதிகம் உரியக்கூடிய தன்மை உள்ளது என்பதையும், அதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் (anti-microbial) உள்ளது என்பதையும் கவுதம் உணர்ந்தார். அதை நிவேதாவிடம் பகிர்ந்த பின்னர், இதை கொண்டு ஏன் இயற்கை குணம் கொண்ட, பெண்களுக்கு சௌகரியமான ஆர்கானிக் சானிட்டரி பேட்-களை உருவாக்கக்கூடாது என இருவரும் ஆலோசித்தனர்.

2017ல் சி.ஐ.ஐ. அமைப்பு, மத்திய அரசு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு சார்பில் நடைபெற்ற ஒரு போட்டியில் நிவேதா, கவுதம் கலந்துகொண்டு 2ம் பரிசு உடன் ரூ.75,000-ஐ வென்றனர். இதிலிருந்து ரூ. 20,000ஐ கொண்டு தங்கள் நிறுவனத்தை துவங்கினர்.

கீரை நாரை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சானிட்டரி பேட்கள் முதலில் லேசான பச்சை நிறத்தில் இருந்தது வாடிக்கையாளர்களால் விரும்பப்படவில்லை. இதனால் இருந்த சவாலை சரிசெய்வது எப்படி என்ற தேடலில் இறங்கி, அதை சமரசம் இல்லாமல் செய்து முடித்தனர் நிவேதா, கவுதம்.

முதலில் வீடு வீடாக ஸ்கூட்டரில் சென்று வாடிக்கையாளர்களுக்கு நிவேதா தங்களது தயாரிப்பை வழங்கியபோது,  “ஏன் இப்படி சிரமப்படவேண்டும்?’ என அவரின் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் அதையெல்லாம் உணர்வுபூர்வமாக எடுத்துக்கொள்ளாத நிவேதா இப்படி செல்வதன் மூலம் தங்களின் தயாரிப்பு மீதான வாடிக்கையாளரின் கருத்துகளை நேரடியாக பெற முடிகிறது என்பதை பற்றி மட்டுமே சிந்தித்தார்.

Bliss 2 scaled

“தொழிலில் உணர்வுகளை ஓரமாக வைத்துவிட்டு, துணிச்சலுடன் களத்தில் இறங்குவதே முக்கியமானது,” என கருதும் இந்த இரண்டு பேர் 1800 வாடிக்கையாளர்களை முதல்கட்டமாக பெற்றனர். இயற்கையில் இருந்து கிடைக்கும் நாரை கொண்டு, வாடிக்கையாளர்கள் கருத்துக்களை தொடர்ந்து பெற்று, அவர்கள் விரும்பிய படியும் , தாங்கள் திட்டமிட்டபடியும் ஒரு ஆர்கானிக் சானிட்டரி பேட்-டை அவர்கள் உருவாக்கினர்.

2018 முதல் சானிட்டரி பேட் உற்பத்தி செய்துவந்த அவர்கள் “அடுத்தது என்ன?” என்ற தொலைநோக்கு பார்வையுடன் பயணித்ததால் இன்று பெண்களின் சுகாதாரம் சார்ந்த தீர்வுகளுக்கான பல்வேறு தயாரிப்புகளை தொடர்ந்து உருவாக்க அது உந்துகோலாக அமைந்தது.

பெண்களின் சுகாதாரம் தொடர்பான 5 பிரிவுகளில் 8 முதல் 9 வகை தயாரிப்புகளை இன்று இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. தொடர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான தயாரிப்புகளை கொடுத்து கொண்டே இருந்ததினால் இன்று இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 3 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

நாம் வாழும் 2026ம் ஆண்டில் கூட சானிட்டரி பேட் பற்றி தெரியாமல் கிராமப்பகுதிகளிலும், மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் மாதவிடாய் காலத்தில் சிரமப்படும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த நிவேதா, கவுதம் உருவாக்கிய நிறுவனம் பிற அமைப்புகளுடன் கூட்டமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

2017ல் கிடைத்த வேலைவாய்ப்பே போதும் என்று இருவரும் முடிவு செய்திருந்தால்… வழக்கமான பாதையில் பயணிப்பதே போதுமானது என்று நினைத்திருந்தால் இன்று இப்படி ஒரு நிறுவனம் உருவாகி இருக்காது. இதனால் இப்படி ஒரு சமுதாய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடிந்திருக்காது.

துணிந்ததால் நடந்தது… துணிந்து நட, வெற்றி உனதே.