கோவையில் நடைபெற்ற 59ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பைக்கான ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
பி.எஸ்.ஜி. இன்ஜினியரிங் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
இதில் எ – பிரிவில் சென்னை – இந்தியன் வங்கி அணி, பெங்களூரு – பேங்க் ஆஃப் பரோடா அணி, புதுதில்லி – இந்திய விமானப்படை அணி, கோவை – இராஜலட்சுமி ஹெச்எஸ்எ போன்ற அணிகளும், பி – பிரிவில் புதுதில்லி – இந்திய இராணுவ அணி, சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, லோனாவாலா – இந்திய கப்பல் படை அணி, கேரளா – கேரளா மாநில மின்சார வாரிய அணிகள் உட்பட 8 அணிகள் கலந்து கொண்டன.
இறுதிப் போட்டியில் சென்னை – இந்தியன் வங்கி அணியும், திருவனந்தபுரம் – கேரளா மாநில மின்சார வாரிய அணியும் விளையாடின. இதில் இந்தியன் வங்கி அணி 68 – 50 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.
முன்னதாக மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில் சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து லோனாவாலா – இந்திய விமானப்படை அணி விளையாடியது. இதில் இந்திய விமானப்படை அணி 81 – 73 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.
வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், 2ம் இடம் பெற்ற கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3ம் இடம் பெற்ற இந்திய விமானப்படை அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4ம் இடம் பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு 25 ஆயிரம் மற்றும் கோப்பையும், இந்தியன் வங்கி அணியின் பாலாவுக்கு சிறந்த விளையாட்டு வீரருக்குகான விருது மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் கோவை ஆட்சியர் பவன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார். பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

