பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போதைய சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன் என ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர்.

நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.

இந்தப் பிரச்னை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை.

ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்.

எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி எனக் கூறியுள்ளார்.