தங்க நகைக்கடன் மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகமாகியுள்ளது. தற்போது வெள்ளியை அடமானம் வைத்தும் கடன் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இனி அவசரத் பண தேவைகளுக்கு வெள்ளியை அடகு வைத்து பணமாக பெற முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் வெள்ளியை அடகு வைத்து கடன் வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளன.

இதன்மூலம் கிராமப்புற வங்கிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வணிக வங்கிகளும் வெள்ளியை பெற்றுக் கொண்டு கடன் வழங்க முடியும். அதேபோல வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுவசதி நிதி நிறுவனங்களும் வெள்ளிக்கு கடன் வழங்க முடியும்.

மேலும், வெள்ளிக்கட்டிகளை வைத்து கடன் பெற முடியாது. நாணயங்கள் மற்றும் நகைகளை வைத்து கடன் பெறலாம். வெள்ளி நகைகளை அதிகபட்சமாக 10 கிலோ வரையும், வெள்ளிக் காசுகளின் எடை 500 கிராம் வரையிலும் அடகு வைத்து கடன் பெறலாம்.

வெள்ளியின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே, நகைகளை அடகு வைக்கும்போது அதன் மதிப்பை 30 நாட்களின் வெள்ளியின் சராசரி இறுதி விலை, அல்லது இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லரி அசோசியேஷன் அல்லது செபியால் முந்தைய நாள் அறிவிக்கப்பட்ட இறுதி விலை, ஆகியவற்றின் அடிப்படையில் நகைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்க நகையை எப்படி அடகு வைக்கிறோமோ அதே போல, வெள்ளியை அடகு வைக்கும் போதும் வங்கியில் இருக்கும் மதிப்பீட்டாளர்கள் வெள்ளியை பரிசோதனை செய்து, அதற்கான தொகையை நிர்ணயித்து வழங்குவார்கள்.