கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்கின்ற வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை குழியில் லாரி ஒன்று சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்குப் பின்பு கிரேன் மூலம் லாரி அங்கிருந்து மீட்கப்பட்டது.

மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளின் போது அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் சேதம் அடைந்து குடிநீர் வெளியேறுகிறது. அதில் இருந்து வெளியேறும் குடிநீர் அங்குள்ள வீதிகளில் குளம்போல் தேங்குகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்குவதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோவை, கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் செங்கல் சூலையில் இருந்து வீடு கட்டும் பணிக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட செங்கல் அப்பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்டு மூடப்பட்டு இருந்த பாதாள சாக்கடை குழியில் சிக்கிக் கொண்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, இதேபோன்று பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஏற்படும் திடீர் குழிகளில் கனரக வாகனங்கள் சிக்கிக் கொள்வதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.