தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வரும் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: தலைமை ஆசிரியர், உதவித் தலைமையாசிரியர் முன்னிலையில் காலை வணக்கக் கூட்டம் நடைபெற வேண்டும். இதில் மாணவர்களைத் தவறாமல் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமை காலை வணக்கக் கூட்டத்தில் 6 முதல் 12 வகுப்பு உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள், கருத்து பரிமாற்றம் சார்ந்து பேச்சு, கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு, திருக்குறள் கதை இடம்பெறலாம்.

பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் வந்து மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும்.

காலை உணவுத் திட்டம் அனைத்துக் குழந்தைகளுக்கும் குறித்த நேரத்திலும் தரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு 2 பாடவேளைகள் உடற்கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்களை இப்பாடவேளைகளில் விளையாட வைக்க வேண்டும்.

மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடம் ஐந்தாம் பாடவேளை ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்கள் சிறார் பருவ இதழ், செய்தித்தாள், பள்ளி நூலகத்தில் உள்ள நூல்கள் போன்றவற்றை வாசிக்கச் செய்ய வேண்டும்.

வாரத்திற்கு ஒரு பாடவேளை நன்னெறி வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல வாரத்திற்கு ஒரு பாடவேளை நூலகச் செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி நேரம் முடிந்தவுடன் வாரத்தில் ஒருநாளில் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.