கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2500 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக பிரபல கல்வி ஆலோசகர் அஷ்வின் கலந்துகொண்டு பேசுகையில்: உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் புதிய தொழில்நுட்ப துறைகளான எலக்ட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்கள் குறித்த தொழில்நுட்பம் டேட்டா சயின்ஸ் போன்ற துறைகளில் மாணவ மாணவிகள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். 12ம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கான பல்வேறு நுழைவுத்தேர்வுகள் பற்றியும் அதற்கு மாணவர்கள் தங்களைத் தயார் செய்வதற்கான சிறப்பு ஆலோசனைகளையும் வழங்கினார்.
மற்றொரு சிறப்பு விருந்தினராக, சென்னை பெரும்பாக்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி கலந்துகொண்டு, தேர்வுக்கான தயாரிப்பில் நான்கு தூண் முறைகள் பற்றி விளக்கி, கடைசி நேர முயற்சியை விட தொடர்ந்து உழைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் கல்வியில் சிறந்து விளங்கிய தலா மூன்று மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, துணைத்தலைவர் இந்துமுருகேசன், தலைமை செயல் அதிகாரி மோகன் தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
