சேமிப்பின் அடையாளமாகக் கருதப்படும் தங்கத்தின் விலை, சமீப காலங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய நாணயக் கொள்கைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலகளவில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியதால், இவற்றின் தேவை வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் விலையும் புதிய உச்சத்தை எட்டிக் கொண்டே வருகிறது. சில நிபுணர்கள் விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விலை உயர்வின் தொடர்ச்சியாக, 2026 ஆம் ஆண்டிலும் தங்கம் விலை, மேலும் உயரக்கூடும் என உலக தங்க கவுன்சில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வட்டி விகிதங்கள் குறைதல், புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்தல், பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளுக்கான தேவை உயர்தல் போன்ற காரணங்களால் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தற்போதைய விலையை விட 15 முதல் 30 சதவீதம் வரை கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சி சீரான நிலையை அடைந்து, ஃபெடரல் ரிசர்வ் எதிர்பார்த்ததை விட வேகமாக வட்டி விகிதங்களை குறைத்தால், தங்கத்தின் விலை கூடுதலாக 5–15% வரை உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. டாலர் மதிப்பு குறைந்தால், முதலீட்டாளர்கள் அரசுப் பத்திரங்களை விற்கத் தொடங்கி தங்கத்தைப் பெற்றுக்கொள்வது வழக்கமாகிறது. இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரித்து விலையும் உயரும்.
சீன சந்தையில் தங்க நகை விற்பனை குறைந்துள்ளது. காரணம், சீனாவில் தங்க நகைகளுக்கான வரி சலுகை நீக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூடுதல் வரி கட்ட வேண்டி இருப்பதால், தங்கம் வாங்குவது குறைந்துவிட்டது. ஆனால் உலகின் பல நாடுகளில் தங்க விலை தொடர்ந்து உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
