ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியருக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, கல்லூரிப் பருவத்தில் மாணவிகள் அறிவைப் பெறுவதோடு, தொழில்நுட்பத் திறன்களைப் பெற்று உடலளவிலும் மனதளவிலும் வலிமை மிக்கவர்களாக இருக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்பதற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக, தன்னம்பிக்கைப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு பேசுகையில்:
கல்லூரிப்பருவம் என்பது துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டமைக்கும் காலத்தைப் போன்றது. எதிர்காலத்தில் வாழ்க்கைக் கடலில் சவால்களைச் சந்திக்கும்போது வல்லமை மிக்கவர்களாக இளம் மனங்கள் உருவாக வேண்டுமானால் கல்லூரி வாழ்க்கையை ஆக்கப்பூர்வமான காலமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கல்வியின் மூலம் உலகளாவிய அங்கீகாரம் பெற முடியும் எனப் பேசினார்.

கல்லூரி முதல்வர் சித்ரா கல்லூரியின் சாதனைகளையும், பல்வேறு துறைகளில் மாணவியர் பெற்ற வெற்றிகளையும் குறிப்பிட்டு கூறினார். கல்லூரியின் ஹெல்த் அண்ட் வெல்னெஸ் கிளப் சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மூலம் மாணவிகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.