பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எஸ்.கே.பி சுனந்தா ராம்மோகன் திறன் மையம் உடுமலைப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா கோவை விஜிஎம் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இந்த மையத்தில் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவான இளைஞர்களுக்கு இலவச தொழிற்கல்வி வழங்கப்படும்.
லாஜிஸ்டிக்ஸ் துறையில் வேலை பெறும் வகையில், 45 முதல் 90 நாட்கள் வரை பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சிக்கு மாணவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த முயற்சி, கரூரைச் சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் டாக்டர் எம். ராம்மோகன் அவர்களின் மகாலட்சுமி-முத்துராமலிங்கம் அறக்கட்டளையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பரிந்துரையின் பேரிலும், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்விக் கழகத் தலைவர் டாக்டர். வி.ஜி. மோகன் பிரசாத் மற்றும் அதன் உறுப்பினர்கள், அறங்காவலர்களின் ஆதரவுடனும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் எஸ்.கே.பி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்விக் கழக தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் கூறுகையில்: தொழிற்கல்வி மூலம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் நிலையான வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்த திறன் மையம் கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.
இந்த மையத்திற்கு, லாஜிஸ்டிக்ஸ் துறையில் அனுபவம் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராவ், ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ரோட்டரியன் சாயிராம் மேற்பார்வையில் இந்த இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்விக் கழகத்தின் துணை செயலாளர் கோபாலன், இந்த மையத்தின் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.

மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
லாஜிஸ்டிக்ஸ் துறை திறன் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற பயிற்சி வழங்கப்படுவதுடன், மூன்றாம் தரப்பு மதிப்பீடு மற்றும் திறன் இந்தியா சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்பு பெற உதவியும் வழங்கப்படும். ஆரம்ப சம்பளம் மாதம் சுமார் ரூ.15,000 அளவில் தொடங்கி, அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
