கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில்  மண்டல அளவிலான மதி உணவுத்திருவிழா புதன்கிழமை தொடங்கியது.  இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வரும் 8ம் தேதி வரை நாள்தோறும் மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் உணவுத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம்.

பல்வேறு மாவட்டங்களிலுள்ள பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானிய உணவு வகைகள், தனித்துவமான அசைவ உணவு வகைகள் சமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Food festival scaled

முக்கிய அம்சமாக கோவை கொங்கு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கோவை அரிசி பருப்பு சாதம், விருதுநகர் பன் பரோட்டா, திருநெல்வேலி அல்வா, சேலம் தட்டுவடை செட்டு, நாமக்கல் பள்ளிபாளையம் சிக்கன், நாமக்கல் வாத்து முட்டை மசாலா, நீலகிரி ராகி களி, சிக்கன் குழம்பு மற்றும் தேநீர் வகைகள், கரூர் முருங்கை சூப் வகைகள், கிருஷ்ணகிரி ராகி களி, கருவாட்டு குழம்பு, நாகப்பட்டினம் மீன் வறுவல், இறால் வடை, நண்டு சூப், மீன் போண்டா, ஈரோடு காளான் பிரியாணி, ஐஸ்கிரீம், கேக் வகைகள், சாக்லேட், பாதாம், ரோஸ்மில்க், திருப்பூர் சிறுதானிய உணவுகள் மற்றும் இதர அறுசுவை உணவு வகைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நிலக்கடலை பர்ஃபி, ஹெல்த் மிக்ஸ், சிறுதானிய உணவுகள், உலர் பழங்கள், வர்க்கி, பிஸ்கட், வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட், தட்டு வடை, 90 கிட்ஸ் தின்பண்ட வகைகள், தினை தின்பண்டங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.