தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. சுமார் 1200 வேலை தேடுவோர் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை வகித்தார்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தின் துணை இயக்குநர் கருணாகரன் பேசியதாவது: பட்டப்படிப்பின் மூலம் பெறும் திறன்களை வைத்து அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஒரு வேலையில் நீடிக்க முடியும். அந்தக் காலத்திற்குள் உங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் அந்தத் துறையில் தேவையற்றவராகிவிடுவீர்கள். காலத்தோடு உங்கள் திறன்களை அப்டேட் செய்யவில்லை என்றால், நீங்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் அவுட்டேட் ஆகிவிடுவீர்கள் என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக (நான் முதல்வன்), நிரல் மேலாளர் கனிமொழி பேசியதாவது: மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் நம்பாமல் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொண்டால்தான் சிறந்த வேலைவாய்ப்பை பெற முடியும் என்றார்.
சிறப்புரையில் ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை இயக்குனர் கவிதாசன் பேசியதாவது: ஒரு நிறுவனம் நமக்கு ஊதியம் தருகிறது என்றால், அதன் தேவையை நாம் பூர்த்தி செய்கிறோம் என்பதுதான் உண்மை. வாடிக்கையாளர்கள் தரம், குறைந்த விலை, நேர்த்தியான உற்பத்தியை எதிர்பார்க்கிறார்கள்.
வாழ்க்கையில் முன்னேற படைப்பாற்றல், அர்ப்பணிப்பு, திறன், துணிச்சல், ஒழுக்கம் ஆகிய பண்புகள் இருந்தால்தான் ஒருவர் உயரம் எட்ட முடியும். திறன்களை தொடர்ந்து அப்டேட் செய்தால், வேலை உங்களைத் தேடி வரும் என்று வலியுறுத்தினார்.
