இந்தியாவின் யானைகள் எண்ணிக்கை தற்போது 22,446 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2017ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 27,312 யானைகளுடன் ஒப்பிடும்போது சுமார் 18 சதவீதம் குறைவாகும். இந்த தகவல், டி.என்.ஏ. அடிப்படையில் நடத்தப்பட்ட அனைத்திந்திய ஒத்திசைவு யானை கணக்கெடுப்பு 2025 அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவின் மொத்த யானை எண்ணிக்கை 18,255 முதல் 26,645 வரை இருப்பதாகவும், சராசரியாக 22,446 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டில் தொடங்கியது.
ஆனால் டி.என்.ஏ. ஆய்வு மற்றும் தரவு சரிபார்ப்பு சிக்கலான செயல்முறையாக இருந்ததால் அறிக்கை வெளியிட 4 ஆண்டுகள் தாமதமானது. நாடு முழுவதும் இருந்து 21,056 யானைகளின் சாணத்தின் மாதிரிகளை சேகரித்து, அவற்றில் இருந்து டி.என்.ஏ மூலம் ஒவ்வொரு யானையும் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டது.
மொத்தம் 6.7 லட்சம் கிலோமீட்டர் காட்டு பாதைகளில் ஆய்வு நடைபெற்றது. இதில் மேற்கு தொடர்ச்சி மலைகள் 11,934 யானைகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய யானை வாழ்விடமாகத் திகழ்கின்றன.
வடகிழக்கு மலைப்பகுதிகள் மற்றும் பிரமபுத்ரா சமவெளிகள் 6,559 யானைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளன. சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகள் 2,062 யானைகளையும், மத்திய இந்தியா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் 1,891 யானைகளையும் தாங்குகின்றன.
மாநில வாரியாக கர்நாடகா 6,013 யானைகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அசாம் 4,159, தமிழ்நாடு 3,136, கேரளா 2,785, உத்தராகண்ட் 1,792 யானைகளுடன் அதனைத் தொடர்ந்து வருகின்றன. ஒடிசாவில் 912 யானைகள் உள்ளன.
சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் சேர்த்து 650க்கும் மேல் உள்ளன. வடகிழக்குப் பகுதிகளில் அருணாசலப் பிரதேசம் (617), மேகாலயா (677), நாகாலாந்து (252), திரிபுரா (153) ஆகிய மாநிலங்களிலும் சிறிய அளவில் யானைகள் காணப்படுகின்றன. மத்தியப் பிரதேசம் (97) மற்றும் மகாராஷ்டிரா (63) ஆகிய மாநிலங்களில் மிகச் சிறிய கூட்டங்கள் மட்டுமே மீதமிருக்கின்றன.
இந்த கணக்கெடுப்பு 3 கட்டங்களில் நடைபெற்றது. முதல் கட்டத்தில், வனத்துறையினர் எம்-ஸ்ட்ரைப்ஸ் எனப்படும் ஆப்ஸை பயன்படுத்தி யானைகள் இருப்பிடங்களை பதிவு செய்தனர். 2வது கட்டத்தில் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் மதிப்பிடப்பட்டது. 3வது கட்டத்தில் மல மாதிரிகளில் இருந்து டி.என்.ஏ. எடுத்து 4,065 தனித்தனியான யானைகளை அடையாளம் கண்டனர்.
உலகில் மீதமுள்ள ஆசிய யானைகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தற்போது இந்தியாவில் உள்ளன. வனப்பகுதிகள் குறைவதும், மனித-யானை மோதல்கள் அதிகரிப்பதும், அடிக்கட்டு மேம்பாட்டு திட்டங்கள் பரவலாக நடைமுறைக்கு வருவதன் காரணமாக அவற்றின் வாழிடங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
