கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் முதலமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழாவில், ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே உயர்ந்தது என கே.பி.ஆர் கல்விக் குழுமங்களின் தலைவர் மற்றும் நிறுவனர் கே.பி. ராமசாமி பேசினார்.

தலைமையுரையில் அவர் பேசியதாவது: பண்பட்ட மாணவ சமூகத்தை படைப்பது இக்கல்லூரியின் முதன்மை நோக்கம். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே உயர்ந்தது. பன்னாட்டு அளவிலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்வதில் மாணவர்களும், பெற்றோர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

சிறப்பு விருந்தினராக ரைட்ஸ் டாட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வித்யா போஜன் கலந்து கொண்டு பேசுகையில்: கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அறிவுச்செல்வம். இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பலதுறைகளில் செய்து வரும் சாதனைகள் மகிழ்ச்சியைத் தருகிறது.

மாணவர்கள் தங்களுக்கான இலக்குகளைத் தீர்மானித்து, அதற்கான திறமைகளை வளர்த்துக் கொண்டு, உயர்ந்த நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வது பெற்றோருக்கும், கல்வி நிறுவனத்திற்கும் செய்யவிருக்கும் மிகப்பெரிய கடமையாகும்.

மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், கல்லூரியில் சிறப்பு நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், தேசிய மற்றும் மாநில அளவில் சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தியாக மாணவர்களை சிறப்பு விருந்தினர் சிறப்பித்தார்.

கே.பி.ஆர் கல்விக் குழுமங்களின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் கீதாமேலாண்மையியல் புல முதன்மையர் ஆனந்த் ஜெரால்டு, பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.