புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் ஜப்பான் எப்போதும் ஆச்சரியப்பட வைக்கத் தவறியதில்லை. அந்த வகையில் தற்போது செயற்கை ரத்தத்தை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். தற்போது இது மருத்துவ சோதனையில் உள்ளது. இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
ஜப்பானிய விஞ்ஞானிகள், அனைத்து ரத்த வகைகளுக்கும் பொருந்தக்கூடிய செயற்கை ரத்தத்தை உருவாக்கி உலக மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லை பதித்துள்ளனர். இந்த செயற்கை ரத்தம், இரண்டாண்டுகள் வரை சேமிக்கக்கூடியதுடன், அவசர மருத்துவ சேவையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கின்றனர்.
சேமிக்கக்கூடிய செயற்கை ரத்தத்தை பற்றிய மருத்துவ ஆய்வை ஜப்பான் தொடங்கும் என கடந்த ஆண்டு அறிவித்தது. ஜப்பானின் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான ஆய்வுக் குழு, ஹீமோகுளோபினை பிரித்தெடுத்து செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளது. தற்போது, தன்னார்வலர்களிடம் இதற்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக மருத்துவமனைகள், ரத்த வங்கிகளில் வழங்கப்படும் இயற்கை ரத்தத்திற்கு 42 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் உள்ளது. மேலும், ஒருவருக்கான ரத்த வகையைப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஆனால், இந்த செயற்கை ரத்தத்திற்கு, ரத்த வகை பொருத்தம் தேவை இல்லை எனக் கூறப்படுகிறது.
அவசரக் காலங்களில் குறிப்பிட்ட வகை ரத்தம் கிடைக்காததால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சில அரிய வகை ரத்தங்களுக்கு வங்கிகளில் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், இது போன்ற செயற்கை ரத்தம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்கை ரத்தம் தொடர்பான ஆராய்ச்சிகள் அமெரிக்கா, இங்கிலாந்திலும் நடைபெற்றுள்ளன. எனினும், ஜப்பானிய விஞ்ஞானிகள் சோதனை நிலையில் முன்னோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தன்னார்வலர்களிடம் செயற்கை ரத்தம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த முயற்சி வெற்றி பெற்றால், 2030ம் ஆண்டுக்குள் இந்த மருத்துவ தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் 16 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு 100 முதல் 400 மில்லிலிட்டர் செயற்கை ரத்தம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவப் பரிசோதனையில் பாதகமான விளைவுகள் இல்லையெனில், ரத்தம் தேவைப்படும் அவசர காலங்களில் செயற்கை ரத்தம் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவ உலகில் கருதப்படுகிறது. ஆனால் இதன் உற்பத்தியை எந்தளவு அதிகரிக்க முடியும் என்பது தெரியவில்லை.
