இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் பலரும் உணவை நிதானமாக சாப்பிட மறந்து விடுகின்றனர். வேகமாக சாப்பிடுவதையே பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இது உடல்நலத்திற்கு நல்லதல்ல. உணவை மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுவது ஜீரணத்திற்கு உதவுவதோடு, உடலுக்கும் மனதுக்கும் திருப்தியையும் தருகிறது. வேகமாக உண்பது பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு காரணமாகலாம்.
முதலில், வேகமாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். நாம் சாப்பிடும் அளவு போதுமானது என்று மூளை உணர சில நிமிடங்கள் ஆகும். ஆனால் அவசரமாக சாப்பிடும் போது, அந்த உணர்வு வருவதற்குள் தேவைக்கு அதிகமாக சாப்பிட்டுவிடுகிறோம். இதனால் உடலில் கூடுதல் கலோரி சேர்ந்து, உடல் பருமன் அதிகரிக்கலாம்.
அடுத்து, ஜீரணக் கோளாறுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது எளிதாக செரிமானம் அடையும். ஆனால் வேகமாக சாப்பிடும்போது, பெரிய துண்டுகளாக உணவு வயிற்றுக்குள் செல்லும். இதனால் உணவு செரிப்பதற்கு அதிக நேரம் பிடிக்கும். இதன் விளைவாக அஜீரணம், வயிற்று சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
வேகமாக சாப்பிடும் பழக்கம் வயிற்றில் வாயு உருவாகவும் காரணமாகிறது. அவசரமாக சாப்பிடும்போது உணவுடன் சேர்த்து அதிக காற்றும் உடலுக்குள் செல்கிறது. இதனால் வயிற்றில் உப்புசம், வாயுத் தொல்லை போன்றவை ஏற்படலாம். மேலும், அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றில் அமிலம் கூடுதலாக சுரந்து, நெஞ்செரிச்சல், இரைப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
உணவில் உள்ள ஊட்டச்சத்துகள், உடலில் முழுமையாக உறிஞ்சப்படுவதிலும் சிரமம் ஏற்படலாம். சரியாக மென்று சாப்பிடாமல் விழுங்கும்போது, உடல், அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போகும். நீண்ட காலத்தில் இது ஊட்டச்சத்து குறைபாட்டை உருவாக்கும் அபாயத்தைத் தரலாம்.
சில நேரங்களில், வேகமாக சாப்பிடுவது மூச்சுத்திணறலுக்கும் காரணமாகலாம். குறிப்பாக, பெரிய துண்டுகளாக உணவை விழுங்கும்போது, அது தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
மேலும், இந்தப் பழக்கம் நீண்ட காலம் தொடரும்போது, மெட்டபாலிக் சின்ட்ரோம் போன்ற உடல்நலச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கலாம். அதாவது, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல், கொலஸ்ட்ரால் உயர்வு போன்ற பிரச்னைகள் உருவாகலாம். இவை இருந்தால் இதய நோய், நீரிழிவு, பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்குக் காரணமாக மாறலாம்.
எனவே, சாப்பிடும் போது அவசரப்படாமல், சிறு சிறு அளவாக எடுத்து, நன்றாக மென்று சாப்பிடுவது அவசியம். இது ஜீரணத்தை மேம்படுத்தவும், தேவையற்ற உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
