கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் விடுதி காப்பாளர்களுக்கான டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் விடுதி காப்பாளர்கள், கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் விடுதிகளில் உள்ள மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

விடுதிகளில் உள்ள உணவருந்தும் கூடங்கள், தோட்டம், பூஜை அறைகள், பால்கனி, வாகன நிறுத்துமிடம், காத்திருப்பு பகுதி, சமையலறை நீர் தேக்கம், குளிர்சாதன பெட்டிகள், மாடிகள், திறந்தவெளி முற்றங்கள் உள்ள அலங்கார பொருட்கள், விளக்குகள், தண்ணீர் தேங்கியுள்ள தொட்டிகள், பயன்படுத்தாத தட்டுகள், பாட்டில்கள், மின்விளக்கு மூடிகள், பெயின்ட் வாளிகள், பூந்தொட்டிகள் ஆகியவற்றில் நன்னீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விடுதிகளின் பின்புறம் சாக்லேட் பேப்பர், பிஸ்கட் பாக்கெட் பேப்பர், டீ கப்புகள், பார்சல் உணவு டப்பாக்கள் ஆகியவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டுவிடுவதால் நன்னீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே, விடுதி காப்பாளர்கள் இவற்றை கண்காணித்து முறையாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், முள்புதர்கள், செடிகள் ஆகியவற்றை அகற்றுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பொறுப்பு அலுவலர்களை நியமித்து, அவர்கள் மூலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாநகராட்சியின் வாராந்திர லார்வா எதிர்ப்பு சுய ஆய்வு சரிபார்ப்பு பட்டியலை நிரப்ப வேண்டும். அன்றைய தினமே மாணவ, மாணவிகளின் பங்கேற்புடன் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள், ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட வேண்டும்.

இதில் சிறப்பாக  செயல்படும்  கல்வி நிறுவனத்திற்கு சுழற்கோப்பை வழங்கப்படும். இதற்காக பிரத்யேக வாட்ஸ்சப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விடுதிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள தண்ணீர் அகற்றுதல், கொசுப்புழு உருவாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், தேவையான இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், புகைமருந்து அடித்தல் மற்றும் லார்வா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மாநகராட்சி மூலம் தொடர்ந்து கண்காணிப்படுவதால் மாணவ/ மாணவியர்களுக்கான உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

மேலும், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏதேனும் இருப்பது கண்டறிப்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனையிலோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ சென்று மருத்துவர்களின் ஆலோசனையின்படி, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால், அப்பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படும். இன்றைய கூட்டத்தில், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதை அனைவரும் பின்பற்றிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.