அதிமுக ஆட்சி அமைந்ததும் தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கும் சட்டம் கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட அக்கட்சி தலைமை அறிவித்துள்ள பல வாக்குறுதிகளை சொல்லி,  முன்னாள் அமைச்சரும் கிணத்துக்கடவு தொகுதியின் அதிமுக வேட்பாளருமான செ.தாமோதரன் கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் போது பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அது போல மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதும் மக்களுக்கு பல திட்டங்கள் வழங்கி, அதை நிறைவேற்றி கொடுப்பார் என கூறி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

‘அனைவருக்கும் அம்மா இல்லத் திட்டம்’ கீழ் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் எனவும், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்திருந்த வாக்குறுதி உள்ளிட்ட பலவற்றை மக்களிடம் கூறி ஆதரவு திரட்டினார்.