கோவை விழாவின் 18வது பதிப்பு ‘இன்ஃபினிட்டி எடிஷன்’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் விழாவைத் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் கோவை விழா 2025 இன் தலைவர் சண்முகம் பழனியப்பன், யங் இந்தியன்ஸ் கோவை அமைப்பின் தலைவர் நீல் கிக்கானி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதுகுறித்து சண்முகம் பழனியப்பன் கூறுகையில்: கோவை விழா வரும் நவம்பர் 14 முதல் நவம்பர் 24 வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் வரலாறு, வளா்ச்சிப் பயணத்தைக் காட்டும் விதமாக லேசா் ப்ரெஜெக்ஷன் மேப்பிங் முறையில் ஸ்கை டான்ஸ் நிகழ்ச்சி கொடிசியா மைதானத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஓவிய வீதி, அறிவியல், தொழில்நுட்ப விழா, பாரா விளையாட்டு, சிறப்பு விளையாட்டுப் போட்டிகள், கோவையின் திறமையை வெளிப்படுத்தும் கோயம்புத்தூா்ஸ் காட் டாலண்ட், கோவை விழா மாரத்தான், இசை மழை, தி பிட்ச், பேரணி, விழா வீதி, வைப்ஸ் ஆப் செட்டிநாடு ஆகியவை இடம்பெறுகின்றன.

கோவை வேக விழா எனும் தலைப்பில் கோ காா்ட் பந்தயம், ஆட்டோகிராஸ் சாம்பியன்ஷிப், காா், பைக் சாகச நிகழ்ச்சி, மோட்டாா் பைக் பேரணி போன்றவை நடக்கவுள்ளது.

பாரம்பரிய விழா, பட்டிமன்றம், வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கண்காட்சி, பிக்கில்பால் போட்டி, பேரன்பு எனும் மூத்த குடிமக்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி, க்ரீன் அப் அண்ட் க்ளோ அப் கோவை எனும் தூய்மைப்பணி முயற்சி, மின் கழிவு சேகரிப்பு முயற்சி, குழந்தைகளுக்கான நிதி மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்வான ரூப்பே ரெடி போன்ற பல நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன எனக் கூறினார்.