கோவை, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உருவாகி வரும் செம்மொழி பூங்கா இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.

கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் திட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திட்டமிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் இருந்த நிலையில் 2021ம் ஆண்டு திமுக ஆட்சி வந்த பின் செம்மொழிப் பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் தொடங்கின.

அதன்படி காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக தேர்வு செய்யப்பட்டது. இதில் தற்போது முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பில் நடைபெற்று வரும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் ரூ.167.25 கோடி நிதி மதிப்பீடு செய்யப்பட்டது.

பூங்காவில், செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம்தரும் வனம், நறுமண வனம் என 23 விதமான  பூந்தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜமுந்திரியில் இருந்து மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு நடப்பட்டு வருகின்றன. அதேபோல 100 வகையான ரோஜாக்களுக்கு வரிசையாக மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.

திறந்த வெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அமர்ந்து பேச புல்தரை, இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. பூங்காவில் மாநாட்டு மையம் கட்டப்பட்டிருக்கிறது. இதில் ஆயிரம் நபர்கள் அமரலாம். முக்கிய பிரமுகர்களுக்கான தனி வழி, உணவு அருந்தும் கூடம், கூட்ட அரங்கம் விருந்தினர்கள் அறை இடம்பெற்றுள்ளது. பூங்கா வளாகத்தில் நடைபயிற்சி பாதை, அரிய வகையான பூச்செடிகள், சிறுவர், சிறுமியருக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த அக்டோபர் மாதம் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், கோவையில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்காவை நவம்பர் மாதம் திறக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் 26ம் தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணியளவில் பூங்கா திறப்பு விழா காண உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதனை முதல்வர் திறந்து வைப்பார் எனவும் கூறப்படுகிறது.