மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் சூழலால் வளைகுடா நாடுகளிடம் இருந்து சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) இறக்குமதி செய்துவரும் இந்தியா போன்ற நாடுகளில் மிகப்பெரும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இல்லங்களுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவும் வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவும் இந்தியாவில் தட்டுப்பாட்டில் உள்ளதாகவே அதை பயன்படுத்திவருவோர் கூறுகின்றனர்.

” கோவையை போன்ற 2ம் நிலை நகரத்தில் நூற்றுக்கணக்கான பல்சுவை உணவகங்கள், 500க்கும் அதிகமான மெஸ்கள், 100க்கும் மேற்பட்ட 3 நட்சத்திர விடுதிகள், 50க்கும் மேற்பட்ட 5 நட்சத்திர விடுதிகள் இயங்குகின்றன. இவை இல்லாமல் கேன்டீன், கேட்டரிங் சேவைகள் உள்ளன. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் ஒரு நாளைக்கு ரூ.500 கோடி வர்த்தகம் ஏற்படும் இடத்தில் ரூ. 200 கோடி தான் நடக்கிறது. தினமும் ரூ.200 கோடி நஷ்டம் தான் ஏற்படுகிறது,” என்கிறார் கோவை மாவட்ட ஹோட்டலியர்ஸ் சங்க செயலாளர் மற்றும் ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலச்சந்தர் ராஜு.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் :- 

சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டு இரண்டாவது வாரத்தில் இருக்கிறோம். கடந்த ஒரு வாரத்தில் பல உணவகங்கள் தங்களிடம் இருந்த சிலிண்டரை வைத்து உணவகத்தை  நடத்தி வந்தனர். போதிய இடவசதி இருப்பவர்கள் விறகடுப்புக்கு மாறினர். எலக்ட்ரிக் இன்டக்ஷன் அடுப்புகளை ஏற்கனவே பயன்படுத்தி வந்தவர்கள் அதை தொடர்ந்து உபயோகித்தனர். ஆனால் வெறும் சமையல் எரிவாயுவை மட்டும் நம்பி உணவகம் நடத்திவந்தவர்கள் பணிகளை நிறுத்த வேண்டிய நிலைக்கு சென்றனர்.

எனவே, கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்கம் சார்பிலும், தமிழ்நாடு மாவட்ட உணவக சங்கங்கள் சார்பிலும், தென்னிந்திய அளவிலும் நாங்கள் தமிழக முதலமைச்சர், பிரதமர், பெட்ரோலியம் துறை, சுற்றுலாத்துறை அமைச்சகங்களுக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் மூலம் இந்தத் துறைக்குத் தேவையான சமையல் எரிவாயு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தோம்.

உணவகத்துறையும் ஒரு அவசியமான அத்தியாவசிய துறைகளில் ஒன்றாக இன்று இருக்கிறது. எனவே அதற்கும் முக்கியத்துவத்தை தர வேண்டும் என்ற அரசை கேட்டிருந்தோம். அரசால் இப்போதைக்கு எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கு முடிந்த உதவியை செய்திருக்கிறார்கள்.

தற்போது சமையல் எரிவாயுவை சுமந்தபடி இரண்டு பெரும் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடிய நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் இருந்த சிலிண்டர்களை விநியோகம் செய்துள்ளனர். இதனால் 5-10% எங்களுக்கு எரிவாயு கிடைக்கிறது.

உணவக தயாரிப்புகளின் விலை உயருமா ?

சமையல் எரிவாயு நிலைமை பழைய நிலைக்கு திரும்பும் வரை வரும் நாட்களில் உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலையில் மாற்றங்கள் இருக்கலாம். கோவையில் சென்ற வாரமும் தற்போதும் முடிந்தவரை உணவகங்கள் விலையை உயர்த்தாமல் இருந்துள்ளன. ஆனால் இப்போது விறகு, விறகு அடுப்பு, அதற்கான ஸ்டாண்ட் போன்ற பிற உபகரண பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. எனவே அடுத்த வாரம் நிலைமை பொறுத்து  உணவக உணவு பொருட்களின் விலைகள் உயர வாய்ப்புள்ளது.

நிலைமை திரும்புவது எப்போது?

நிலைமை சரியாக வேண்டுமென்றால் போர் நிறுத்தப்படவேண்டும். இந்த நேரத்தில் இந்திய அரசு எடுத்திருக்கக்கூடிய நல்ல முயற்சிகளின் காரணமாக தொடர்ந்து சமையல் எரிவாயுவை சுமந்தபடி பெரும் கப்பல்கள் இந்தியாவிற்குள் வந்து கொண்டிருக்கிறது.

இருந்தாலும் மொத்தமாக நிலைமை முழுதாக பழையபடி திரும்ப எண்ணெய் நிறுவனங்களில் கருத்துக்கணிப்பை வைத்து பார்க்கும்போது மே மாதம் வரை ஆகலாம் என தெரிகிறது. இந்த இக்கட்டான சூழலிலும் உணவகங்களை மூடாமல் தொடர்ந்து இயக்கி வருகிறோம். வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அரசு தலையீடு தேவை

இந்த சூழலில் கள்ள சந்தையில் சிலிண்டர்கள் விற்கப்பட்டு வருகிறது. ஒரு சிலிண்டருக்கு ரூ.5000 முதல் 6000 வரை விலை காசுகேட்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சிலிண்டர்கள் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை, எனவே அரசு இதை தடுக்க வேண்டும்.

மின்சாரத்துக்கு மாற இது தேவை!

இந்த நிலையில் மின்சாரம் பயன்படுத்தி சமையல் அடுப்பை இயக்குவோருக்கு  தமிழ்நாடு அரசு 1 யூனிட்டுக்கு ரூ. 2 மானியமாக கொடுக்கிறது.

மின்சாரத்தை கொண்டு இயக்கக்கூடிய இன்டக்சன் அடுப்புகளை வருங்காலத்தில் பயன்படுத்த நாங்கள் திட்டம் வைத்துள்ளோம். ஆனால் அதற்கு மிகப் பெரிய முதலீட்டை செய்யவேண்டும். எதிர்காலத்தில் இப்படி ஒரு மாற்று வழிக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு தேவைப்படும் அளவு மின்சாரத்தை அரசு கொடுக்க முன்வர வேண்டும். அவ்வாறு கொடுக்க முன் வந்தால் நாங்கள் மின் அமைப்பிற்கு மாற தயார்.

உணவக துறை சார்ந்தவர்கள் பலரும் உயர் அழுத்த மின் இணைப்புக்கும் அதற்குத் தேவையான இட வசதியை எங்களுடைய வளாகங்களில் ஏற்படுத்த முடியாத நிலையிலும் உள்ளோம். பலரும் சொந்த கட்டிடங்களில் இல்லை. எனவே அவ்வாறு உயரழுத்த கட்டமைப்பை ஏற்படுத்த தேவையான இடம் தர நில உரிமையாளர்கள் விரும்புவதில்லை.

இதுபோன்ற நடைமுறை சவால்கள் பல இருப்பதால் எங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை வழக்கமான கமர்சியல் இணைப்பு முறையில் கொடுக்க அரசு முன்வர வேண்டும்.

இண்டக்சன் முறை சமையல் என்பது பல வகையில் எளிதானது ஆனால் உடனே அதற்கு  மாற முடியாது. என்றாலும் எதிர்காலத்தில் அதற்கு மாற்று செல்ல இந்த விஷயங்கள் தேவைப்படும்.

Haribhavanam 2

ஹரிபவனத்தில் தற்போதைய நிலைமை எப்படி?

400க்கும் மேற்பட்ட உணவுகள் வழங்கிய இடத்தில் இன்று 30-40 வகை உணவுகள் தான் வழங்குகிறோம். பெரும்பாலும் விறகு அடுப்பு சமையலுக்கு மாறி உள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவைகள் கிடைக்கும் வேண்டும் என்பதற்காக எங்கள் சென்ட்ரல் கிட்சன் வளாகத்தில் விறகு அடுப்பு மூலம் உணவுகளை தயாரித்து வருகிறோம். 40% மேல் வர்த்தகம் பாதிப்பு உள்ளது. இந்த தருணத்தில் வாடிக்கையாளர்கள் ஆதரவு  கிடைத்துவருகிறது, அது தொடரவேண்டும்.