கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், 2 ஆண்டுகளுக்குள் பணிகளை நிறைவேற்றி தர வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி, பயணிகளின் வசதிகளை மேம்படுத்திட கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் டெல்லியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து பேசினார்.

வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரிக்கல் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மோகன், ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் கோவை, திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் போது கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விமான நிலையத்தை மேம்படுத்துவது, விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தற்போதுள்ள நிலத்தைக் கொண்டு கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், 2 ஆண்டுகளுக்குள் பணிகளை நிறைவேற்றி தர வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும் தற்போதுள்ள இடத்தில் பயணிகள் வசதிக்கு தேவையான இடைக்கால நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்ய இரண்டு வாரங்களில் ஒரு குழுவை கோவைக்கு அனுப்புவதாகவும், விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பாக உதவிகள் செய்து தரப்படும் என் அமைச்சர் உறுதியளித்ததாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.