கோயம்புத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) சார்பில் ‘ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு அவிநாசி சாலையில் உள்ள செம்பெர் டவர்ஸில் புதன்கிழமை நடைபெற்றது. வளரும் இளம் கட்டுமானப் பொறியாளர்களுக்குப் பயிற்சி தரும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ்’ லோகோவை சிபாகா முன்னாள் தலைவர் சுகுமாறன் வெளியிட, அதனை முன்னாள் தலைவர் காந்திமதிநாதன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் முத்துராமன் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினராக சங்கர் & அசோசியேட்ஸ் பார்ட்னர் சித்தார்த் சங்கர், ஸ்ரீவத்சா ரியல் எஸ்டேட்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜீவ் ராமசாமி, ஸ்ரீனிவாசா அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிபாகா தலைவர் ரம்யா செந்தில், கௌரவ செயலாளர் ஷம்சுதீன், சார்ட்டர் தலைவர் நாராயணன், முன்னாள் தலைவர் சப்தரிஷி, முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

திறனும், தன்னம்பிக்கையும்
சிபாகா சங்கத்தில் இருக்கும் உறுப்பினர் நிறுவனங்களில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள பொறியாளர்களுக்கான திட்டம் தான் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ். இதில் கட்டுமானத் தொழில்களின் மேம்பாட்டுக்காக இளம் பொறியாளர்களுக்கு கட்டுமானத் துறை சார்ந்த அனைத்து விஷயங்களிலும் தன்னம்பிக்கை, திறன் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி வகுப்புகள் மொத்தம் 120 மணி நேரம் நடக்கும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று வகுப்பு நடைபெறும்.
