இன்றைய உலகில் புற்றுநோய் என்பது சிலரை மட்டுமே பாதிக்கும் நோய் அல்ல. கிராமம் முதல் நகரம் வரை, சாதாரண உரையாடல்களில் கூட புற்றுநோய் குறித்து கேட்பது சாதாரணமாகி விட்டது. ஆனால், இப்போது நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. புற்றீசல் போல பரவி, உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த நோய் அடுத்த சில தசாப்தங்களில் கட்டுக்குள் வைக்க முடியாத நிலைக்கு செல்லும் என புதிய ஆய்வு எச்சரிக்கிறது.

தி லான்செட் மருத்துவ இதழில் வெளியான சமீபத்திய அறிக்கை உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில், 2050-ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் பொருள், இன்னும் 25 ஆண்டுகளில் உலகளவில் சுமார் 3 கோடியே 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவர். அதில், ஒரு கோடியே 86 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையிலேயே கவலைக்கிடமான விஷயம் என்னவெனில், இந்தியாவும் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களில் (1990–2023) இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 26.4% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், சீனாவில் அதே காலகட்டத்தில் பாதிப்பு 18.5% குறைந்துள்ளது.

1990-ஆம் ஆண்டில், லட்சத்தில் 84 பேருக்கு புற்றுநோய் இருந்த நிலையில், 2023-இல் அது 107 பேராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, 2023-ல் மட்டும் இந்தியாவில் 12.1 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.

புகையிலைப் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை போன்ற வாழ்க்கை முறைகளே புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் 40% க்கும் அதிகமானவை இவ்வகை காரணிகளால் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.

ஆனால், உலக சுகாதார அமைப்புகள் புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு தேவையான முக்கியத்துவத்தை தரவில்லை எனவும், பல நாடுகளில் இதற்கான நிதி மற்றும் வளங்கள் குறைவாக உள்ளன எனவும் ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் லிசா ஃபோர்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். வளங்கள் குறைவாக உள்ள நாடுகளில் புற்றுநோய் சுமையின் அதிகரிப்பைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.