இந்திய வீடுகளில் சாதம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால், இரவு நேரத்தில் சாதம் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்பது குறித்து பலரிடையே வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன. இதை அறிவியல் மற்றும் ஆயுர்வேதம் அடிப்படையில் ஆராய்ந்து பார்ப்போம்.

ஆயுர்வேதத்தின் படி, அரிசி ஒரு குளிர்ச்சியான மற்றும் மென்மையான உணவாக கருதப்படுகிறது. மேலும், பழைய அரிசி சாப்பிடும்போது அது செரிமானத்திற்கு எளிதாக இருக்கும் என்றும், புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இரவில் உடலின் செரிமான சக்தி குறைந்திருப்பதால், அப்போது அரிசி சாதம் சாப்பிடுவது வாயு, அஜீரணம் மற்றும் கனமான உணர்வுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அரிசியில் அதிகம் உள்ள கார்போஹைட்ரேட்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் என்றாலும், இரவில் உடலில் வளர்சிதை மாற்றம் குறைவாக இருக்கும் நிலையில், இந்த கார்போஹைட்ரேட்கள் முழுமையாக செரிமானமாகாது. இதனால் உப்புசம், அசிடிட்டி அல்லது கொழுப்பு சேரும் சாத்தியம் உள்ளது. குறிப்பாக, சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் இருப்பின், அந்த ஆற்றல் கொழுப்பாக மாறி எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

எனினும், இரவில் சாதம் சாப்பிடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயமல்ல. சரியான விதத்தில் சமைத்த மற்றும் செரிமானத்திற்கு எளிதான அரிசி உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. உதாரணமாக, கிச்சடி, சீரக சாதம் அல்லது வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கப்பட்ட சாதம் போன்றவற்றை உட்கொள்வது எளிதாக ஜீரணமாகும்.

அரிசி உணவு சாப்பிடும் முன் வெதுவெதுப்பான நீர் அல்லது லேசான சூப் குடிப்பது செரிமானத்திற்கு உதவும். பழுப்பு அரிசி மற்றும் பழைய அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடலில் செரிமானம் எளிதாக நடைபெறும்.  சாதம் சாப்பிட்ட பிறகு 5-10 நிமிடங்கள் ஒரு சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்வதால், உணவு எளிதாக செரிமானமாகும். குறிப்பாக உடல் நல பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவரின் பரிந்துரையைப் பெறுவது அவசியம்.