கோவை தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் அருகே எஸ்.பி.வேலுமணி, வானதி சீனிவாசன் ஆகியோருடன் பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பேசினார்.

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 200 இடங்களில் திமுக வெல்லும் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். திமுக வலுவான கூட்டணியாக இருக்கலாம் ஆனால் மக்களின் பலம் அதிமுகவிற்கு தான். அதிமுக, பாஜக கூட்டணி அமைத்ததுமே ஸ்டாலின் புலம்ப ஆரம்பித்துவிட்டார். சட்டமன்றத்தில் ஸ்டாலின் பேசிய நேரத்தில் திடீரென ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேட்டார்.
எங்கள் முடிவைக் கண்டு இவர் ஏன் புலம்புகிறார்? அதிமுக பாஜக கூட்டணி அமைந்தவுடன் ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது. தோல்வியின் பயத்தைப் பார்க்கிறோம். மத்தியில் சிறப்பாக ஆட்சி செய்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.

அதிமுக தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களுக்கு நன்மை தரும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசிடம் தேவையான நிதி பெற்று திட்டம் அனுமதி பெற்று நிறைவேற்றினோம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொண்டாமுத்தூர் தொகுதியில் ஒரு திட்டமாவது நிறைவேற்றினார்களா? இந்த பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இரண்டாம் கட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வேலுமணி கோரிக்கை வைத்தார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இரண்டாம் கட்டத் திட்டம் நிறைவேற்றப்படும். குடிநீர் அனைவருக்கும் தடையின்றி கிடைக்கும். மண் அள்ளும் விவசாயிகள் மீது வழக்கு, ஃபைன் போட்டுள்ளனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தடையின்றி வண்டல் மண் அள்ளிக்கொள்ளலாம்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். வனவிலங்குகள், யானைகள் அடிக்கடி பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதற்கு தீர்வுகாண அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தோட்டப் பகுதியில் வனவிலங்குகள் வராமல் இருக்கவும், மக்களை தாக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்திருக்கிறது.

