கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பழைய படுக்கை, சோபா, மெத்தை, மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை முறையாக அகற்றும் வகையில் ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரு நாட்கள் சிறப்பு சேகரிப்பு முகாம் நடத்தப்பட்டது.

அதன்படி நேற்று நடைபெற்ற முகாமில், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 9.89 டன்களும், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 9.05 டன்களும், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 19.70 டன்களும், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 18.55 டன்களும் மற்றும் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 8.25 டன்களும் என சுமார் 65.44 டன் அளவிற்கு பெரிய வீட்டு கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் பழைய படுக்கை, சோபா, மெத்தை, மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப் பொருட்களை பொதுமக்கள் இடம் இருந்து பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும் என்றும், அதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.