கங்கா மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதனை மருத்துவமனையின் தலைவர் கனகவல்லி சண்முகநாதன் துவக்கி வைத்தார். நிகழ்வில் இயக்குநர் டாக்டர் ராஜா சபாபதி, ஆன்கோபிளாஸ்டிக் மார்பக அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா சண்முககிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள், ஆரம்பத்திலேயே கண்டறியும் முறைகள், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தாமாகவே மார்பக பரிசோதனை செய்வதின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

மாமோகிராம் மாதிரி மூலம் அதன் பரிசோதனை நடைமுறை விளக்கப்பட்டது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு குறைந்தது ஒருமுறை மாமோகிராம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கண்காட்சியின் முக்கிய அம்சமாக, மார்பகப் புற்றுநோய்க்குப் பிந்தைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நவீன மைக்ரோசர்ஜரி முறையின் விளக்கம் இடம்பெற்றுள்ளது. இது சிகிச்சைக்குப் பிறகு பெண்களுக்கு முன்பிருந்த உடல் வடிவத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் பெற உதவுகிறது.
மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் கை வீக்கம் மேலாண்மை பற்றிய தகவல்கள் மற்றும் கீமோத்தெரபி குறித்து மக்களிடையே நிலவும் தவறான நம்பிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது.
