கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில், தீவிர வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு, இந்தியாவிலேயே முதல் முறையாக வலிப்பு நோய் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
31 வயதான இப்பெண், தனது இளம் வயது முதலே வலிப்பு நோயால் அவதிப்பட்டுள்ளார். இவரது முதல் பிரசவத்தின் போதும் வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், 2வது முறையாக கருவுற்றபோது, கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் வலிப்பின் தீவிரம் அதிகரித்தது. தினசரி 10 முதல் 15 முறை வலிப்பு ஏற்பட்டதோடு, உட்கொண்ட மருந்துகளும் பலனளிக்கவில்லை. இதனால் தாயின் உயிருக்கும், கருவின் வளர்ச்சிக்கும் கடும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது.
இதனையடுத்து, கேஎம்சிஹெச் மருத்துவமனையின் நரம்பியல் துறை நிபுணர்கள், அதிநவீன எம்.ஆர்.ஐ, வீடியோ இஇஜி பரிசோதனைகளை மேற்கொண்டதில், மூளையின் வலது பின்பகுதியில் இருந்த ‘ஃபோக்கல் கார்டிக்கல் டிஸ்ப்ளேசியா’ எனப்படும் பிறவி கட்டிதான் தொடர் வலிப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டது.
பொதுவாக, கர்ப்ப காலத்தில் மூளை அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்படும். இந்த நோயாளிக்கு வலிப்பு மிகவும் தீவிரமாக இருந்ததால் மருத்துவமனையின் உயர்மட்ட மருத்துவக் குழுவினர், கர்ப்ப காலத்திலேயே அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர்.
பல மணி நேரம் நடைபெற்ற இந்தஅறுவை சிகிச்சையின் மூலம், மூளையில் வலிப்பை ஏற்படுத்திய பிறவி கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளிக்கு வலிப்பு ஏற்படுவது முற்றிலும் நின்றுவிட்டது.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அப்பெண் 6 மாத கர்ப்பிணியாக ஆரோக்கியத்துடன் இருக்கிறார். கருவில் உள்ள குழந்தையும் நல்ல உடல்நலத்துடன் வளர்ந்து வருகிறது.