கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையான ஆண்கள் பிரிவுக்கான கபடிப் போட்டி நடைபெற்றது.

போட்டியினைக் கல்லூரி முதல்வர் கீதா துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில், வெற்றி தோல்விகளைக் கடந்து ஒவ்வொரு மாணவரும் இது போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராகப் பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் இயக்குநர் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசுகையில், கபடியில் ஈடுபாடு கொண்ட மாணவர்கள் எப்போதும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் என்றும், மேலும், தலைமைப் பண்பில் சிறந்து  விளங்குபவர்கள் என்றும் கூறினார்.

மேலும் ஒரு சிறப்பு விருந்தினராக வணிகவரித்துறை அலுவலகக் கண்காணிப்பாளர் பால மகேந்திரன் கலந்துகொண்டார். அவர் தனது உரையில், தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட விளையாட்டுத் துறை சார்ந்த அனுபவங்களை வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

18 கல்லூரிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதலிடமும், ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகைக் கல்லூரி இரண்டாமிடமும், கோவை அரசுக் கலைக் கல்லூரி மூன்றாமிடமும் மற்றும் கதிர் கலைக் கல்லூரி நான்காம் இடமும் பெற்றன. முதல், இரண்டு இடங்களைப் பிடித்த கல்லூரிகள் மண்டல அளவிலான போட்டிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளன.

இப்போட்டியினைக் கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் தமிழரசி ஒருங்கிணைத்தார்.