சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் சார்பில் 12 பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘நல்லாசிரியர் விருது – 2025’ வழங்கப்பட்டது.
சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் அமைப்பின் தலைவரும், பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளியின் முதல்வருமான கிரீஷ் ஈஸ்வரன் முன்னிலை வகித்து பேசுகையில்: கணினி உலகில் தற்காலத்தில் அறிமுகமாகியுள்ள பெர்பிலிக்சிட்டி, சாட்ஜிபிடி, ஏஐ போன்ற மென்பொருள்கள் நமது வேலைகளுக்கு மாற்றுப் பொருள்களாக மாறிவரக்கூடிய நிலை உள்ளது. மாணவர்களிடத்தில், அறிவு, திறன் வளர்ச்சி, திறனைச் செயல்படுத்தும் தகுதி ஆகியவற்றை வளர்க்க வேண்டியது அவசியம் என்று பேசினார்.
சச்சிதானந்த பள்ளிச் செயலர் கவிதாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு கல்வி முறையை மாற்றலாம். ஆனால், ஒழுக்கமும் பழக்கமும் மாறாதது. அறத்தோடு வாழ்கிற வாழ்க்கைதான் மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்க முடியும்.
வெல்லுகிறபோது தட்டுகிற கைகளை விட வீழுகிறபோது தாங்குகிற கைகள் புனிதமானவை. அப்படிப்பட்ட கைகளைக் கொண்டவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். தாங்கள் படித்ததை மாணவர்களிடத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
விழாவில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், பள்ளியின் கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ், கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் அமைப்பின் செயலர் பத்மநாபன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
